சென்னை, கலைவாணர் அரங்கத்தில் விடுதலை போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் நல்லகண்ணுவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா இன்று (29.12.2024) நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “தோழர் இரா. நல்லகண்ணு 100 நூறு கவிஞர்கள் நூறு கவிதைகள்" என்ற நூலினை வெளியிட்டார்.
இவ்விழாவில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் பேசுகையில், “மகத்தான தலைவனுக்கு நடக்கும் இந்த விழாவை 92 வயது கடந்தும் தவறாமல் தலைமை ஏற்றிருக்கும் பழ. நெடுமாறனுக்கு வாழ்த்துக்கள். நானும் வாழ்த்துவதைக் காட்டினும் வாழ்த்து பெறத் தான் வந்தேன். பொது வாழ்வில் தூய்மை நேர்மை தனிமனித ஒழுக்கம் இதெல்லாம் யார் வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் ஒரு மனிதன் தான் வாழ்ந்த கொண்டிருக்கிற நூறு ஆண்டிலும் அதைக் கடைப்பிடித்தார் என்றால் அது நல்லக்கண்ணு தான்.
இன்றைய உலகம் நல்லவர்களுக்கான உலகமாகவே இல்லை. இன்றைக்கு நம்முடைய வளங்கள் எல்லாம் பறி போய்க் கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய திராவிட அமைப்புகளின் வாக்கு அரசியலுக்கு உள்ளே இல்லாத தமிழமைப்புகளின் ஒற்றை குரலாகச் சட்டமன்றத்தில் வேல்முருகன் குரல் ஓங்கி ஒலிக்கிறது. அதையும் அடக்குகிறார்கள், முடக்குகிறார்கள். தமிழக இளைய சமுதாயம் ஏதோ ஒரு போதையில் இருக்கிறார்கள். சினிமா போதை அல்லது சாராய போதை அதனுடைய வெளிப்பாடு தான் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த அநியாய அட்டூழியம். இந்த போதையில் இருந்து இளைஞர்களை விடுத்து அடுத்த தலைமுறைக்கு நல்ல கருத்துக்களைச் சொல்லி நல்லகண்ணு போல நல்ல மனிதர்களாக இளைய தலைமுறையினர் வர வேண்டும்” என்றார்.