Skip to main content

“தொடர்ந்து எழுதப்பட்ட உண்மைகள்.. அச்சமடைந்து தாக்குதல் நடத்திய பள்ளி நிர்வாகம்..” வேல்முருகன் எம்.எல்.ஏ. கண்டனம் 

Published on 20/09/2022 | Edited on 20/09/2022

 

Velmurugan MLA Condemn to Shakthi Matriculation school

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே இயங்கிவரும் சக்தி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் மாணவி ஒருவர் மர்மான முறையில் உயிரிழந்தார். இது தொடர்பான செய்திகளை நமது நக்கீரனின் தொடர்ந்து விசாரணை செய்து வெளியிட்டுவருகிறோம். அந்த வகையில் நேற்றும் நமது முதன்மைச் செய்தியாளர் பிரகாஷ் மற்றும் ஒளிப்பதிவாளர் அஜித்குமார் ஆகியோரை பள்ளி தாளாளர் ரவிக்குமாரின் சகோதரர் அருண் சுபாஷ் உட்பட 10 பேர் வழிமறித்து கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். இந்த வழக்கில் தற்போது 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர். 

 

அந்த வகையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும், பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பான விவகாரத்தில், செய்தி சேகரிக்க சென்ற நக்கீரன் இதழின் மூத்த பத்திரிகையாளர் பிரகாஷ் மீது பள்ளி நிர்வாகத்தினர் தாக்குதல் நடத்தியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஒரு நாட்டில் பத்திரிகைகள் சுதந்திரமாக செயல்படும்போது, அதன் வாயிலாகவே அந்நாட்டில், அனைவருக்குமான பாதுகாப்பு என்பது தீர்மானிக்கப்படுகிறது என்பது அமெரிக்காவின் மூன்றாவது அதிபர் தாமஸ் ஜெபர்சனின் கூற்று. உள்நாட்டுப் போர், கொரோனா வைரஸ் தொற்று எனப் பல இக்கட்டான சூழலில், பத்திரிகையாளர்கள் உயிரையும் பொருட்படுத்தாது தங்களது பணியினை சிரத்தையுடன் மேற்கொண்டனர். ஆனால், பத்திரிகையாளர்கள் மீதான விரோதப் போக்குகள் என்பது தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. 

 

கள்ளக்குறிச்சி கனியாமூர் சக்தி பள்ளியில், மாணவி மரணம் தொடர்பாக பல்வேறு தகவல்களை வெளியிட்டு வந்தார் நக்கீரன் இதழின் மூத்த பத்திரிகையாளர் பிரகாஷ். இந்நிலையில், பள்ளி மாணவியின் மரணத்தில் நீடிக்கும் மர்மம் குறித்து, செய்தி சேகரிக்க சென்ற மூத்த பத்திரிகையாளர் பிரகாஷ், புகைப்பட கலைஞர் அஜித்குமார் ஆகிய இருவர் மீதும் ரவுடி கும்பலை ஏவி கொலை வெறித் தாக்குதலை நடத்தியுள்ளது பள்ளி நிர்வாகம்.

 

தலைவாசல் அருகே பிரகாஷ் சென்ற காரை பின் தொடர்ந்து வந்த கும்பல், பிரகாஷ் மற்றும் புகைப்படக் கலைஞர் அஜித்குமார் ஆகியோர் மீதும் கடும் தாக்குதலை நடத்தியுள்ளது. உண்மை சுடும் என்பது பெரியோர் வாக்கு. தொடர்ந்து எழுதி வந்த உண்மைகளால் அச்சமடைந்த பள்ளி நிர்வாகம், இப்படியான தாக்குதலை நடத்தியுள்ளது. மாணவர்களுக்கு கல்வியை போதிக்க வேண்டிய பள்ளி நிர்வாகம், அதற்கு பதிலாக மாணவர்களையும், பொதுமக்களையும், பத்திரிகையாளர்களையும் மிரட்டி வருவது ஏற்புடையதல்ல.

 

பத்திரிகையாளர் பிரகாஷ், புகைப்பட கலைஞர் அஜித்குமார் மீது தாக்குதல் நடத்திய குண்டர்களை காவல்துறை கைது செய்யப்பட்டிருப்பது வரவேற்கதக்கது. இந்த தாக்குதலை நடத்த காரணமான பள்ளி நிர்வாகத்தை, நீதியின் முன் நிறுத்துவதற்கு தமிழ்நாடு அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மூத்த பத்திரிகையாளர் பிரகாஷ், அஜித்குமாருக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். மேலும், பத்திரிகையாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். அவர்கள் தங்கள் பணிகளை, எந்த அச்சமும், இடையூறுமின்றி, மேற்கொள்ள தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.” இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்