கரோனாவைத் தடுக்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக வேலை இல்லாமல் அடிமட்ட கூலித் தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் பலரும் வறுமையில் வாட துவங்கியுள்ளனர். அப்படிப்பட்டவர்களுக்கு திமுக ஒன்றிணைவோம் வா எனச்சொல்லி உதவி கேட்டு தொலைபேசியில் கேட்பவர்களுக்கு அந்தந்தப் பகுதி திமுக நிர்வாகிகள் அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகின்றன. அதேபோல் வேறு சில கட்சிகளும், சமூக நல ஆர்வலர்களும் உதவிகளைச் செய்து வருகின்றன. அந்த வரிசையில் நடிகர் ரஜினியின் மக்கள் மன்றத்தினரும் களத்தில் இறங்கி உதவி பொருட்களை வழங்க தொடங்கியுள்ளனர்.
வேலூர் மாநகர ரஜினி மக்கள் மன்றம் சார்பாக மாநகர துணைச் செயலாளர் சரவணன் ஏற்பாட்டில், கரோனா தொற்று பரவாமல் இருக்க அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவின் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் உள்பட நலிவடைந்த குடும்பங்களைச் சேர்ந்த 400 பேருக்கு தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்களுடன், காய்கறிகள் அடங்கிய பொருட்களைப் பைகளில் போட்டுத் தனித்தனியாக வழங்கினர்.
உதவி பொருள் வாங்க வந்திருந்த தொழிலாளர்களுக்கு, எப்போதும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகப் பயனாளிகள் அனைவருக்கும் கையுறை மற்றும் முகக் கவசங்கள் வழங்கி அணிய வைத்தனர். சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், வேலூர் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர் சோளிங்கர் ரவி, வேலூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர், ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட இணை செயலாளர் நீதி (எ) அருணாச்சலம் உள்ளிட்டோர் 400 குடும்பத்தினருக்கு நிவாரண உதவி பொருட்களை வழங்கினர்.
இதுவரை ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பாக அந்தந்த பகுதிகளில் உள்ள நிர்வாகிகள் ஏற்பாட்டில் 11 லட்சத்துக்கும் அதிகமான தொகையில் பத்தாயிரம் குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார் ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர் ரவி.