வேலூர் மாவட்டம், வாணியம்பாடியில் வாணி டெக் என்கிற தனியார் பள்ளியில் கல்வி கட்டணம் கட்டாததால் 10 ஆம் வகுப்பு மாணவியை கடந்த 3 நாட்களாக வகுப்பறைக்கு வெளியே நிற்கவைத்து கொடுமைப்படுத்தியது பள்ளி நிர்வாகம். அக்டோபர் 22ந்தேதி மதியம் அம்மாணவி பள்ளி வளாகத்தில் மயங்கி விழுந்தார். அவரை வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர் அவரது பெற்றோர். இந்த தகவல் வாணியம்பாடியில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அரசு மருத்துவமனைக்கு சென்ற தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில சிறுபான்மை துறை மாநிலத் தலைவர் அஸ்லம் பாஷா, அம்மாணவியிடமும், குடும்பத்தாரிடம் விசாரித்தார். அவர்கள், 10ஆம் வகுப்பு மாணவி காயத்ரி இவ்வாண்டுக்கான கட்டணம் 45000 ஆயிரம் ரூபாயில் 9000 ஆயிரம் ரூபாய் மட்டுமே கட்டியதாகவும். மீதி பணம் இன்னும் கட்டவில்லை என்றதால் வகுப்பறைக்கு வெளியே நிற்கவைக்கப்பட்டதாக தெரிவித்தார். அப்பா டிரைவரா இருக்கறார், வருமானம் சரியா இல்லை இன்னும் சில தினங்களில் கட்டிவிடுகிறேன் எனச்சொன்னார். அதனை பள்ளியில் சொன்னேன் அவர்கள் கேட்கவில்லை என்றார்.
அதனை கேட்டு வருத்தமடைந்த அஸ்லம்பாஷா, காங்கிரஸ் கட்சியின் மாநில சிறுபான்மைதுறையின் சார்பாக தனது நிதி மற்றும் நண்பர்களிடம் நிதி வாங்கி 30 ஆயிரத்துக்கு காசோலையை தந்து பள்ளியில் கட்டணத்தை செலுத்திவிட சொன்னார். நன்றாக படிக்க வேண்டும் என வாழ்த்திவிட்டு, வேறு உதவிகள் வேண்டுமானால் என்னை தொடர்புக்கொள்ளுங்கள் எனச்சொல்லி நம்பிக்கை தந்துவிட்டு வந்துள்ளார்.
இதுப்பற்றி அஸ்லம்பாஷாவிடம் பேசியபோது, "சரியாக படிக்காத பிள்ளைகளை, தாமதமாக வரும் பிள்ளைகளை வெளியே நிறுத்தி வைப்பதை கேள்விப்பட்டுள்ளோம், கட்டணம் செலுத்தவில்லையென வகுப்பறைக்கு வெளியே நிறுத்திவைத்து அவமானப்படுத்துவதை இப்போதுதான் காண்கிறேன். இது கண்டிக்கதக்கது. அந்த பள்ளி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுப்போன்ற நிகழ்வுகள் வருங்காலத்தில் நடைபெற்றால் அந்த பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்து, அதனை அரசே ஏற்று நடத்த வேண்டும், அப்படி செய்யவில்லையெனில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்" என்றார்.