வேலூர் மாவட்டம், அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 5 பேர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்ததாக அவர்களின் உறவினர்களும், பொதுமக்களும் குற்றம் சாட்டினர். மேலும், கரோனா சிறப்பு வார்டில் ஆக்சிஜன் விநியோகத்தில் தடை எனவும் அவர்கள் புகார் கூறியுள்ளனர்.
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு விளக்கம் அளித்த மருத்துவமனையின் டீன் செல்வி, "ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் இறக்கவில்லை. சர்க்கரை நோய் உள்ளிட்ட பாதிப்பால் நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்" என்று தெரிவித்தார்.
அதேபோல் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் கூறுகையில், "ஆக்சிஜன் பற்றாக்குறை என்பது முற்றிலும் தவறான தகவல். அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 5 நோயாளிகள் உயிரிழக்கவில்லை. உயிரிழந்த 5 நோயாளிகளில் 2 பேர் கரோனா பாதிப்பு இல்லாதவர்கள். அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் போதுமான ஆக்சிஜன் அளவு இருப்பு உள்ளது" என்றார்.