தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் அக்கட்சியின் சார்பாக வெளியிடப்பட்டது. அதில், ஓ.பன்னீர்செல்வம் போடி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
தமிழக அரசு சமீபத்தில், வேளாளர் பெயரை மாற்று சமூகத்திற்கு வழங்க பரிந்துரை செய்திருந்தது. இதற்கு கண்டனம் தெரிவித்து வேளாளர் மற்றும் வெள்ளாளர் சமூகத்தினர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்திவருகின்றனர்.
தமிழக அரசின் இந்தப் பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வேளாளர் சமுதாய முன்னேற்ற கழகத்தின் மாநில இளைஞர் அணி செயலாளரான பந்தல் ராஜா என்பவர் வரும் சட்டமன்றத் தேர்தலில் போடி தொகுதியில் போட்டியிடவிருப்பதாக பேசப்பட்டுவந்தது. இந்நிலையில் அவர் நேற்று (08.03.2021) சென்னையில் திடீரென காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இவரின் கைதைக் கண்டித்து அச்சமுதாய மக்கள் தேனி - திண்டுக்கல் சாலையில் பெரியகுளம் பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பந்தல் ராஜாவின் கைதைக் கண்டித்தும், ஓ.பி.எஸ்க்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர். தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதன்பின் அவர்கள் சாலை மறியலைக் கைவிட்டனர்.