விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘’மே-18, ஈழமண்ணில் இனவழிப்புக் கொடூரம் நடந்தேறிய நாள். “யுத்தம் முடிந்தது; விடுதலைப்புலிகள் அழிந்தனர்” என்று இராஜபக்ஷே தலைமையிலான சிங்கள இனவெறி கும்பல் கொக்கரித்த நாள். பத்தாண்டுகள் உருண்டோடி விட்டன.
ஈழத்தமிழர் வாழ்வில் இன்னும் வெளிச்சக் கீற்று வெளிப்படவில்லை. இனக்கொலை மற்றும் போர்க்குற்றம் இழைத்த இராஜபக்சே கும்பல் இன்னும் விசாரிக்கப்படவும் தண்டிக்கப்படவும் இல்லை. மேலும் எஞ்சியுள்ள தமிழருக்கு மறுவாழ்வளிக்கவும் அவர்களின் வாழ்வாதாரங்களுக்கான மறுகட்டமைப்பைச் செய்யவும் ஆளுங்கும்பல் எந்த முனைப்பையும் பெரிதாக மேற்கொள்ளவில்லை.
தமிழர் காணிகள் யாவும் சிங்கள இராணுவத்தினருக்கென ஆக்கிரமிப்புக்குள்ளாகி பெருமளவில் இராணுவமயமாகி வருகிறது. இராணுவக் குடும்பத்தினர் புலப்பெயர்வு என்னும் பெயரில் சிங்கள குடியேற்றம் தீவிரமாகி வருகிறது. அத்துடன், கலாச்சார ரீதியாகவும் தமிழ்மண் ‘சிங்கள- பௌத்த’ மயமாகி வருகிறது. அதாவது, தமிழினத்தின் கலாச்சாரம் அல்லது பண்பாடு மெல்ல மெல்ல சிதைக்கப்பட்டு வருகிறது. வீதிகளின் பெயர்கள், கடைகள், உணவகங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத்தலங்கள் போன்றவை சிங்கள அடையாளங்ளாக மாறி வருகின்றன.
போர்ச்சூழலிலும் அதன்பின்னரும் கடந்த பத்தாண்டுகளில் காணாமல் போன தமிழர்களின் நிலை என்ன என்பது பற்றிய தகவல் ஏதும் இல்லை. சிங்கள இனவெறி ஆட்சியாளர்கள் அது குறித்து கிஞ்சித்தும் அக்கறை காட்டவில்லை.
உலகநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்கள் யாவரும் தமது தாயகம் திரும்புவதற்குரிய நல்லிணக்கமான-நம்பகமான சூழல் இன்னும் அங்கே மலரவில்லை.
இந்தியா உள்ளிட்ட அண்டைநாடுகளோ ஐநா பேரவை உள்ளிட்ட சர்வதேச சமூகமோ பாதிக்கப்பட்ட ஈழத்தமிழருக்கு உரிய நீதிகிட்ட ஏதுவாக எந்தவொரு நேர்மறையான நகர்வையும் மேற்கொள்ளவில்லை. மாறாக, சிங்கள இனவெறி ஆட்சியாளர்களுக்குத் துணைபோகும் அவலமே இன்னும் தொடர்கிறது.
இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சி மாறி,பாரதிய ஜனதா ஆட்சிக்கு மலர்ந்தால் தமிழ்ச்சமூகத்துக்கு நலம்பயக்குமென்கிற சிலரின் தமிழினத்தின் எதிர்பார்ப்பு தகர்ந்துபோயுள்ளது. ஈழத்தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் ஆண்டாலும் பாஜக ஆண்டாலும் ஒரே நிலைப்பாடு மற்றும் ஒரே அணுகுமுறைதான் என்பது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகமும் சர்வதேச அரசியல் சூழலுக்கேற்ப ஒருங்கிணைந்து செயல்படவும் இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் நல்லாதரவை வென்றெடுத்து மண்ணை மீட்கவும் மக்களைக் காக்கவும் இந்நாளில் உறுதியேற்போம்.
வீரச் சாவுகளே விதிகளைத் திருத்தும்! விடுதலைக் களமே விடியலைப் படைக்கும்!’’