Published on 20/07/2018 | Edited on 20/07/2018
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள பழவேரிக்காடு முன்னாள் ஊ.ம தலைவர் குமாரசெல்வம், அமமுகவின் மாநில பொதுக்குழு உறுப்பினர். இவரது வீட்டுக்கு கடந்த 17ந் தேதி காலை சென்ற மதுக்கூர் போலீசார் ஒரு பிசிஆர் வழக்கு சம்மந்தமாக விசாரணைக்கு வர வேண்டும் என அழைத்துள்ளனர்.
சற்று தாமதமாக வருவதாக குமாரசெல்வம் சொன்னதை கேட்காமல் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றுள்ளனர். தகவல் அறிந்த அவரது உறவினர்கள் மாலை மதுக்கூர் காவல் நிலையம் சென்று கேட்ட போது அவரை எங்கே வைத்துள்ளனர் என்பது பற்றி தகவல் சொல்லவில்லை. அதனால் அவரை பட்டுக்கோட்டை மற்றும் பல காவல்நிலையத்திலும் தேடியுள்ளனர்.
இந்தநிலையில் இன்று வெள்ளக்கிழமை இரவு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குமாரசெல்வம் இறந்துள்ளார் என்ற தகவல் கொடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 17ந் தேதி கைது செய்யப்பட்ட குமாரசெல்வத்தை காவல் நிலையத்தில் தாக்கிய போது அவருக்கு உடல்நக்குறைவு ஏற்பட்டதால் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்த போலீசார் அதன் பிறகு உறவினர்களுக்கு தகவல் கொடுக்காமல் மறைத்துவிட்டனர்.
இந்த நிலையில் தான் குமாரசெல்வம் இறந்துள்ள தகவல் கிடைத்துள்ளது. இது பற்றி அமமுகவினரும் அவரது உறவினர்களும்.. காவல் நிலையத்தில் தாக்கியதில் பாதிக்கப்பட்டவரை போலீசாரே மருத்துவமனையில் சேர்த்துவிட்டு தலைமறைவாகிவிட்டனர். இறந்த பிறகு தகவல் சொல்கிறார்கள். குமாரசெல்வத்தை அடித்துக் கொன்ற போலீசார் மீது நடவடிக்கை எடுக்கும் வரை அவர் உடலை வாங்கமாட்டோம் என்கின்றனர். இதனால் பட்டுக்கோட்டை மதுக்கூர் பகுதியில் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது. பொதுக்குழு உறுப்பினர் குமாரசெல்வம் இறுதி நிகழ்ச்சியில் தினகரன் கலந்துகொள்வார் என்றும் கூறப்படுகிறது.