நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி கேட்கப்பட்டிருந்த நிலையில் தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு காவல்துறையால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மீண்டும் நீதிமன்றத்தை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நாடியுள்ளது. இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு நாளை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கிறது.
அதேநேரம் தற்பொழுது தமிழக அரசு சார்பில் தமிழக காவல்துறையும் நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் சூழல் உள்ளதால் நீதிமன்றம் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி அளித்தது தொடர்பான உத்தரவை மறுசீராய்வு செய்ய வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கோவை பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், ''நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தமிழக காவல்துறை அனுமதி மறுத்தது எந்த விதத்திலும் நியாயம் அல்ல. ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தமிழக காவல்துறை அனுமதி அளிக்க வேண்டும். தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் செயல்பாடுகளை முடக்க நினைப்பது பகல் கனவாகவே முடியும்'' என தெரிவித்துள்ளார்.