நீட் விலக்கு மசோதாவை நிராகரிப்பதாக ஆளுநர் மாளிகையிலிருந்து நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்புக்கு பல்வேறு அமைப்பினரும் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். தமிழக அரசு இதுதொடர்பாக விரிவான விளக்கத்தை தெரிவித்துள்ளது. ஆளுநரின் முடிவை கடுமையாக எதிர்ப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ள நிலையில், குறிப்பிட்ட சில அரசியல் கட்சியினர் ஆளுநர் மாளிகை முற்றுகையிடப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.
நாடாளுமன்றத்திலும் திமுக உறுப்பினர்கள் இதுதொடர்பாக பேசி வருகிறார்கள். இன்று காலை திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கொடுத்த தனிநபர் மசோதாவை சபாநாயகர் நிராகரித்ததால் திமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார். அதில்,
திருப்பி அனுப்புவது
ராஜ்பவனின் மேட்டிமை
மீண்டும் அனுப்புவது
சட்டமன்றத்தின் உரிமை
நாளை
முதலமைச்சர் கூட்டும்
அனைத்துக்கட்சிக்
கூட்டத்தின் முடிவை
ராஜ்பவனும்
ஜனாதிபதி மாளிகையும் மட்டுமல்ல
இருள்கட்டிக் கிடக்கும்
ஏழைக் குடிகளின்
ஓலைக் குடிசைகளும்
கண்ணில் நீரோடு
கவனிக்கின்றன
இவ்வாறு கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.