தீண்டாமை ஒரு பாவச்செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை ஒரு மனிதநேயமற்றது. இந்த வாசங்கள் பாடப்புத்தகங்களில் முதலில் பதிக்கப்பட்டிருக்கும். ஆனால் அதை பெரும்பாலானவர்கள் கடந்தேபோயிருப்பர் என்பதுதான் எதார்த்தமான உண்மை.
தமிழகம் மட்டுமல்ல சுதந்திர இந்தியாவில் ஏதோ ஒரு மூலையில் தினசரி தீண்டாமையால் படுகொலை, சாதியின் பெயரால் கவுரவப்படுகொலைகள், இரட்டைக்குவளை முறை, நடந்து கொண்டுதான் இருக்கிறது. மேலும் சாதியின் அடையாளத்தால் தேசத்தலைவர்களின் சிலைகள் உடைக்கப்படுவதும், அவமானப்படுத்துவதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
அந்த வரிசையில், இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது வேதாரண்யத்தில் நடந்த அம்பேத்கரின் சிலை சிதைக்கப்பட்ட சம்பவம். சாதியத்தால் நிகழ்ந்த துயரமான சம்பவம் நடந்த, அதே நாகை மாவட்டத்தில் சாதிபாகுபாடே இல்லாமல், தீண்டாமை இல்லாத, ஒரே சுடுகாடு, ஒரே கோவில் என சமூக நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது திருமருகல் அருகே உள்ள திருப்பயத்தங்குடி கிராமம். அந்த கிராமத்திற்கு தீண்டாமை இல்லாத கிராமமாக தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்டு நிதியும் வழங்கப்பட்டுள்ளது.
அந்த கிராமம் பற்றிய ஒரு செய்தி தொகுப்பு;
தீண்டாமை கடைப்பிடிக்கப்படாத கிராமமாக நாகை மாவட்டம், திருமருகல் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட திருப்பயத்தாங்குடி கிராமம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு தீண்டாமையைக் கடைப்பிடிக்காமல், மத நல்லிணக்கத்துடன் வாழும் கிராமமாக அந்த கிராமத்தை மேம்படுத்தவும், பள்ளிக்கட்டடம் சீரமைத்தல், பள்ளிக் குழந்தைகள் நலமையம் கட்டுதல், கால்நடைகளுக்குத் தண்ணீர் தொட்டி அமைத்தல், புதிய தெருவிளக்குகள் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ள ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் ரூ. 10 லட்சம் பரிசுத்தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 800 குடும்பங்கள் வாழும் அந்த கிராமப்பகுதியில் அனைத்து சமூகத்தினரும் ஒற்றுமையோடு இருப்பதாகவும், எந்தவித சாதி மத பாகுபாடுகளையும் கடைபிடிப்பதில்லை என்று பெருமையோடு ஒவ்வொருவரும் கூறுகின்றனர்.
கிராமத்தின் பெருமையைக்கூறும் ஆறுமுக பாண்டியன் கூறுகையில், "கோயில் திருவிழாக்கள், குடிநீர் மற்றும் நீர்நிலைகளை உபயோகப்படுத்தல் உள்ளிட்ட அனைத்திலும் எங்களுக்குள் வேறுபாடுகள் இல்லாமல் அனைவரும் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகிறோம். அரசு விதித்திருக்கும் விதிபடி பல சமூகங்களை சேர்ந்தவர்கள் எங்கள் கிராமத்தில் வசித்தாலும், கோவில் வழிபாடு, டீ கடையில் டீ குடிப்பது, டிபன் சாப்பிடுவது உள்ளிட்ட அனைத்திலும் நாங்கள் ஒற்றுமையாகவே இருக்கிறோம். அதேபோல் விவசாய வேலைகளிலும் ஒற்றுமையோடு தான் செய்வோம். அதனால் தான் எங்களுக்கு இந்த விருது கிடைக்க காரணம்."என்கிறார்.
அந்த கிராமத்தைச் சேர்ந்த கோபால ஐய்யர் கூறுகையில், "சாதி பாகுபாடு இல்லாமல் வாடகை வீடு கொடுப்பது, சாதி பார்க்காமல் கலப்புத்திருமணம் செய்துகொள்வது என ஒற்றுமையாக இருக்கிறோம். இதுவரை 8 தம்பதியினர் கலப்பு திருமணம் செய்துகொண்டு நிம்மதியாக வாழ்கின்றனர். தனியார் கிணற்றில் அனைத்து சமூகத்தினரும் தண்ணீர் எடுத்து கொள்வது, பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் சாதி மத அடையாள கயிறுகள் கட்டாமல் இருப்பது போன்றவைகள் எங்கள் கிராமத்தின் கூடுதல் சிறப்பு." என்கிறார்.
அந்த பகுதி சமுக ஆர்வலர்களோ, " தலித் பெண் பள்ளியில் சமைக்க எதிர்ப்பு, வழிபாட்டில் சம உரிமை மறுக்கப்படுவது, ஆணவக்கொலை போன்ற பல்வேறு சமூக ஒடுக்குமுறைகள் நடைபெறும் தமிழகத்தில் தீண்டாமை ஒருநாள் ஒழியும் என்ற நம்பிக்கையை எங்கள் கிராமங்களை" போன்ற கிராமங்கள் விதைக்கின்றன".என்கிறார்.
'சாதிகள் இல்லையடி பாப்பா' என்று அழுத்தி சொன்னார் முண்டாசு கவிஞர் பாரதி. ஆனால் அவர் கவிதையை கற்றுக்கொடுக்கும் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சாதி நவீன மயமாகி புறையோடி வருவது வேதனையின் உச்சம்.