நிரப்பப்படாத நிகர்நிலை பல்கலை. மருத்துவ இடங்களை அரசு ஒதுக்கீட்டுக்கு வழங்குக: ராமதாஸ் வலியுறுத்தல்
நிரப்பப்படாத நிகர்நிலை பல்கலைகழக மருத்துவ இடங்களை அரசு ஒதுக்கீட்டுக்கு வழங்கு வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
அகில இந்திய அளவில் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு நடத்தப்பட்ட கலந்தாய்வில் வெறும் 10% இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டிருக்கின்றன. தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் 90 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட மருத்துவ இடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 8 மருத்துவ நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மொத்தம் 1328 இடங்கள் உள்ளன. இவற்றில் 1185 இடங்கள் உள்நாட்டு மாணவர்களைக் கொண்டும், 143 இடங்கள் வெளிநாடு வாழ் இந்தியர்களைக் கொண்டும் நிரப்பப்பட வேண்டும். இந்த இடங்களை நிரப்ப, சுகாதாரச் சேவைக்கான தலைமை இயக்குனரகம் மூலம் கடந்த மாதம் ஆன்லைனில் நடத்தப்பட்ட தேசிய அளவிலான கலந்தாய்வில் 10 விழுக்காட்டுக்கும் குறைவான இடங்களே நிரப்பப்பட்டுள்ளன. தமிழகத்தில் தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்நாட்டு மாணவர்களைக் கொண்டு நிரப்பப்பட வேண்டிய 1185 இடங்களில் 112 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டிருக்கின்றன. மீதமுள்ள 1073 இடங்கள் இன்னும் காலியாக உள்ளன. இது 90.55% ஆகும். அதேபோல் வெளிநாடு வாழ் இந்தியருக்கான 143 இடங்களில் 58 இடங்கள் நிரப்பப்பட்டுள்ள நிலையில் 85 இடங்கள் காலியாக உள்ளன. இது 60% ஆகும். ஒட்டுமொத்தமாக 1328 இடங்களில் 12.80% மட்டுமே நிரப்பப்பட்டிருக்கின்றன. மீதமுள்ள 87.20% இடங்கள் காலியாக உள்ளன.
தமிழ்நாட்டு நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள மருத்துவ சேர்க்கை இடங்களை மாணவர்கள் தேர்வு செய்யாததற்கு இரு முக்கியக் காரணங்கள் உள்ளன. முதலாவது தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு இன்னும் கலந்தாய்வு நடத்தப்படாத நிலையில், அதில் சேர்வதற்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்பதால் மாணவர்கள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களை தேர்வு செய்யாமல் இருந்திருக்கலாம். ஏனெனில், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கான கலந்தாய்வில் பங்கேற்று ஏதேனும் ஒரு கல்வி நிறுவனத்தில் சேர்ந்தவர்கள் வேறு எந்தக் கலந்தாய்விலும் பங்கேற்க முடியாது என்பதால் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கலாம்.
நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் கல்விக் கட்டணம் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு எட்டாத அளவில் இருப்பது தான் இதற்கு காரணமாகும். எனவே, அகில இந்திய அளவில் சுகாதார சேவைக்கான தலைமை இயக்குனரகம் நடத்தும் கலந்தாய்வில் நிரப்பப்படாத மருத்துவ இடங்களை தமிழக நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு வழங்குவதற்கு பதிலாக அரசு ஒதுக்கீட்டுக்கு வழங்கலாம். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள அதிகபட்சக் கட்டணத்தை அவற்றுக்கான கல்விக்கட்டணமாக நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு அரசே வசூலித்து வழங்கலாம்.
இதன்மூலம் நிரப்பப்படாத நிகர்நிலைப் பல்கலைக்கழக மருத்துவ இடங்களுக்கு மாணவர்கள் கிடைப்பர். மாணவர்களுக்கு அரசு நிர்ணயித்த குறைந்த கட்டணத்தில் மருத்துவப் படிப்பு கிடைக்கும். எனவே, நிரப்பப்படாத நிகர்நிலைப் பல்கலைக்கழக மருத்துவ இடங்களை அரசு ஒதுக்கீட்டுக்கு வழங்கி, அரசு நிர்ணயித்தக் கட்டணத்தில் நிரப்ப மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.