மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் திருச்சி, தஞ்சை மாவட்டங்கள் சார்பில் பொதுத்துறை, பொதுக்காப்பீட்டு நிறுவனங்கள் பாதுகாப்பு தொடர்பான சிறப்புக் கூட்டம் நேற்று (19/11/2022) திருச்சியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு சங்கத்தின் மதுரை மண்டலத் தலைவர் பிரபு தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் பேசிய தென்மண்டல இன்சூரன்ஸ் சங்கத் துணைத் தலைவர் புஷ்பராஜன், "அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள், இந்திய பொருளாதார வளர்ச்சியில் மிகப்பெரிய பங்காற்றி வருகின்றன. பொதுமக்களிடமிருந்து திரட்டப்படும் செல்வம், பொதுமக்களுக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டவையே இந்த பொதுத்துறை நிறுவனங்கள். ஒவ்வொரு கடைக்கோடி இந்தியனுக்கும் காப்பீட்டு சேவையைக் கொண்டுச் சேர்க்கும் ஒரு மகத்தான சேவையை செய்து கொண்டிருக்கின்றன.
பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களைத் தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சி, அலுவலக மூடல்கள், புதிய ஊழியர் நியமனம் இல்லாமை போன்ற செயல்களின் மூலம் பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை நலிவடைய செய்யும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இந்த தனியார்மய முயற்சியை கைவிடக்கோரியும், நான்கு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களையும் இணைத்து வலுவான நிறுவனத்தை உருவாக்கவும், பொதுத்துறையை பாதுகாக்கவும், பாலிசிதாரர் நலனை பாதுகாக்கவும் ஒன்றுபட்ட போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்" என்றார்.