ஹிந்த் மஸ்தூர் சபா சார்பில் இன்று திருச்சி ரயில் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம்.யு. கூட்ட அரங்கில் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வருகின்ற மார்ச் மாதம் 28, 29 ஆகிய தேதிகளில் மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து மாபெரும் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநில நிர்வாகிகள் கூட்டத்தில், ‘தொழிலாளர் சட்ட தொகுப்புகள் நான்கையும் கைவிட வேண்டும். மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். தேசிய பணமாக்கும் கொள்கை உள்ளிட்ட எந்த பெயராலும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது. வருமான வரி செலுத்தும் அளவுக்கு வருவாய் இல்லாத குடும்பங்களுக்கு மாதம் ஒன்றுக்கு 7 ஆயிரத்து 500 ரூபாய் வீதம் நிவாரணம் வழங்க வேண்டும். மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்தி நகரங்களுக்கு விரிவுபடுத்த வேண்டும்’ உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அச்சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ராஜா ஸ்ரீதர், செய்தியாளர்களிடம் பேசுகையில் “மத்திய அரசானது தொடர்ந்து தொழிலாளர்கள் விரோதப் போக்கை கடைபிடித்து வருவதோடு, தொழிலாளர்களுக்கான சட்டத்தை எந்த ஒரு தொழிற்சங்கத்தையும் கலந்தாலோசிக்காமல் அவர்களாகவே முடிவு செய்து, தொழிலாளர் சட்ட தொகுப்புகள் நான்கை நிறைவேற்றி மத்திய அரசு தொழிலாளர்களுக்கு எதிரான விரோத போக்கை செயல்படுத்தி வருகிறது. எனவே, அவற்றை கண்டிக்கும் விதமாக இந்த நாடு தழுவிய போராட்டம் வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது.
இந்த புதிய சட்டங்களால் தொழிலாளர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது மத்திய அரசு. தனியார் மயமாக்கல் என்ற பெயரில் தற்போது பொது மக்களுக்கு மிகுந்த பயனுள்ள விதமாக அமைந்துள்ள இந்த ரயில் போக்குவரத்தை மத்திய அரசு தனியார் மயமாக்கி அதன் மூலம் மக்களுக்கு தொழிலாளர்களுக்கும் தொடர்ந்து வஞ்சகம் செய்து வருகிறது.
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு குறிப்பாக தமிழகத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு என்று தனி துறை ஒதுக்கப்பட்டு அதற்கான உதவிகள் அனைத்தும் செய்யப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசு புதியபுதிய சமூக பாதுகாப்பு என்ற திட்டத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு பெற்றுத் தரக்கூடிய அனைத்து நன்மைகளையும் முடக்க நினைக்கிறது. வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவேன் என்று தன்னுடைய தேர்தல் வாக்குறுதியில் பிரதமர் நரேந்திர மோடி கொடுத்திருந்த நிலையில், நிரந்தர தொழிலாளர்களை பணியிலிருந்து நீக்கிவிட்டு ஒப்பந்த தொழிலாளர்களை பணியில் அமர்த்தி குறிப்பிட்ட வேலைகளுக்காக மட்டுமே பயன்படுத்தி விட்டு அவர்களை வெளியேற்ற கூடிய நிலை உருவாகியுள்ளது. பணி பாதுகாப்பு என்பது தற்போது இல்லாத சூழ்நிலையில் வேலைவாய்ப்பு இன்றி தொடர்ந்து பலர் தவித்து வருகின்றனர். எனவே மத்திய அரசின் இப்படிப்பட்ட விரோதப் போக்கினை கைவிட வலியுறுத்தி இந்தியா முழுவதும் மார்ச் 28, 29 ஆகிய இரண்டு தேதிகளிலும் கட்டாயம் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார்.