கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் பல இடங்களில் அண்மையில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்தனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. அதே சமயம் தொடர் கனமழை எதிரொலியாக குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
ஏற்கனவே மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு மாநில அரசு நிவாரணம் அறிவித்துள்ளது. தொடர்நது மத்திய குழுவும் வருகை தந்து ஆய்வு மேற்கொண்டது. மத்திய அரசு சார்பில் சென்னை வந்த பாதுகாப்புப் படை துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டார். அதேபோல் தென்மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கும் தமிழக அரசு நிவாரணம் அறிவித்துள்ளது. மத்திய குழுவும் ஆய்வு செய்துவிட்டு சென்றிருந்தது.
இந்நிலையில் தூத்துகுடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு செய்ய உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. நாளை மறுநாள் தூத்துக்குடி வரும் அவர் நேரில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய இருக்கிறார்.