திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியம், ஆலமரத்துப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புறநோயாளிகள் பிரிவு கட்டடம், அய்யம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர்களுக்கான இரண்டு குடியிருப்பு கட்டடம், ரூ.15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கொசவப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்தா பிரிவு கட்டடம், கொடைரோடு அம்மையநாயக்கனூரில் புதிய துணை சுகாதார நிலையம் என ரூ. 1.58 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கட்டடங்களுக்கான திறப்பு விழா கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் முனைவர் விசாகன் தலைமை தாங்கினார். பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்தி ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார பணிகள் துணை இயக்குநர் வரதராஜன் வரவேற்று பேசினார். விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆகியோர் கலந்துகொண்டு கட்டடங்களை திறந்து வைத்தனர்.
அதன் பின் பொதுமக்கள் மத்தியில் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, “தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியின் போதுதான் கிராமங்களில் சுகாதார நிலைய கட்டடங்கள் கட்டப்பட்டு, திறந்து வைக்கப்பட்டு வருகின்றன. 1989ம் ஆண்டு நான் முதன் முதலாக சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றபோது குறைந்தது 5 ஏக்கர் நிலமும், 25 ஆயிரத்திற்கும் மேல் மக்கள் தொகையும் உள்ள இடங்களில் தான் ஆரம்ப சுகாதார நிலையங்கள் கொண்டு வரப்பட்டன. ஆனால் அப்போது முதல்வராக இருந்த கலைஞர் எனது வேண்டுகோளை ஏற்று ஆலமரத்துப்பட்டியில் ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டு வந்தார். தற்போது தமிழக முதல்வராக இருக்கும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் எண்ணற்ற மக்கள் நலனுக்கான திட்டங்களை மருத்துவத் துறையின் மூலம் செயல்படுத்தி வருகிறார்.
கொரோனா பெருந்தொற்றில் இருந்து தமிழக மக்களை காப்பாற்ற தமிழக முதல்வரும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும் எடுத்துக் கொண்ட பணிகள் மகத்தானது. திமுக ஆட்சியின்போது முதல்வராக இருந்த கலைஞர், பண்ணைக்காட்டில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனையை கட்டிக் கொடுத்ததால் நூற்றுக்கணக்கான கிராம மக்கள் பயன்பெற்றுள்ளனர். ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட மலை கிராமமான ஆடலூர், பன்றிமலை, கேசிபட்டி, மலையாண்டிபுரம் உட்பட்ட மலை கிராம மக்களின் நலனுக்காக ஆடலூர், பன்றிமலையில் ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளேன். விரைவில் அதற்கான அறிவிப்பை தமிழக முதல்வர் வெளியிடுவார்” என்று கூறினார்.
அதன் பின் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “ஒரு தொகுதியில் வெற்றி பெற்றவர்கள் தேர்தல் நேரத்தின்போது மலைக் கிராம மக்களுக்கு வாக்குறுதி கொடுப்பார்கள். அதன் பின்னர் அதனை மறந்துவிடுவார்கள். ஆனால் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை கூட்டுறவுத்துறை அமைச்சராக இருக்கும் ஐ.பெரியசாமி, கொரோனா தொற்றாக இருக்கட்டும், தமிழக முதல்வர் அறிவித்த நகைக்கடன், பயிர்க் கடனாக இருக்கட்டும் அனைத்திலும் நூறு சதவிகிதம் செயல்படுத்தி வெற்றி கண்டவர்.
மலைக் கிராம மக்கள் நலனுக்காக ஆடலூர், பன்றிமலை பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் கேட்டுள்ளார். ஒன்றிய அரசு கடந்த 10 வருடங்களுக்கு மேலாக ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனுமதி கொடுக்கவில்லை. தற்போது தமிழகம் முழுவதும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் சீரிய முயற்சியால் 20க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் வர உள்ளன. அதில் 2 ஆரம்ப சுகாதார நிலையங்கள் திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆடலூர், பன்றிமலையிலும், ஒட்டன்சத்திரம் தொகுதியிலும் அமைய உள்ளது. மலைக் கிராம மக்களின் நலனில் அதிக அக்கறையோடு செயல்படும் கூட்டுறவுத்துறை அமைச்சருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சட்டமன்றத்தில் மக்கள் நல்வாழ்த்துறை சார்பாக 136 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதில் 18 அறிவிப்புகள் திண்டுக்கல் மாவட்ட அறிவிப்புகள்” என்று கூறினார்.