வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்தது, ஒரு சீர்திருத்த முயற்சியே என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சென்னை, ராயப்பேட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வேளாண் சட்டங்கள் குறித்து விளக்கமளித்தார். அப்போது அவர் கூறியதாவது; "வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்தது ஒரு சீர்திருத்த முயற்சியே. ஆதாயம் கிடைக்கக்கூடிய வகையில், எங்கு வேண்டுமானாலும் விளைபொருட்களை விற்கலாம். மாநிலங்களுக்கு இடையே விளை பொருட்களை விற்கும் முறை மத்திய அரசின் வசம்தான் உள்ளது. வேளாண் சட்டத்தில் எந்தவிதக் குழப்பமும் இல்லை; உற்பத்தியாளர்களுக்கு சுதந்திரம் உள்ளது. தங்களின் விளை பொருட்களை விற்பது பற்றி விவசாயிகளே தீர்மானிக்கலாம். விளைபொருட்களை எவ்வளவு விலைக்கு, யாரிடம் விற்பது என விவசாயிகளே முடிவு எடுக்கலாம்.
வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு முழு உரிமை வழங்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும். எந்த வகையிலும் அது நீக்கப்படமாட்டது. இதுகுறித்து பரப்பப்படும் தகவல்கள் வெறும் வதந்திகளே. விவசாயிகளுக்கு இதுவரை விதிக்கப்பட்ட 8% முதல் 8.5% வரையிலான வரி, இனி இருக்காது. விளை பொருட்களைப் பெற்றதுடன் ரசீதும், மூன்றில் இரண்டு பங்கு தொகையையும் உடனே வழங்க வேண்டும்." இவ்வாறு மத்திய அமைச்சர் கூறினார்.