Skip to main content

'பத்திரிகையாளர்களை அச்சுறுத்துவதை நிறுத்து'-சென்னை பத்திரிகையாளர் மன்றத்தினர் போராட்டம்  

Published on 01/02/2025 | Edited on 01/02/2025

 

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர், தனது ஆண் நண்பருடன் பல்கலைக்கழக வளாகத்தில் பேசிக் கொண்டிருந்த போது ஆண் நண்பரைத் தாக்கிவிட்டு, ஞானசேகரன் என்ற நபர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்படி சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை கண்டித்து ஆர்ப்பாட்டம் சென்னை பத்திரிகையாளர் மன்றம் அறிவித்திருந்தது. இது தொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்ற தலைவர் ம.சுரேஷ் வேதநாயகம் மற்றும் பொதுச்செயலாளர் மு.அசீப் ஆகியோர் நேற்று வெளியிட்டிருந்த அறிவிப்பில், 'அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியான வழக்கில், விசாரணை என்ற பெயரில், பத்திரிகையாளர்களை மிரட்டும் வகையிலும் சட்டத்திற்கு  புறம்பாக அவர்களின் செல்போன்களை பறிமுதல் செய்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழுவின் (SIT) நடவடிக்கையை கண்டித்தும், சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பாக நாளை (01.02.2025)  மாலை 4 மணியளவில், மன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கருத்துரிமையை காப்பாற்றவும் நமது பத்திரிகை சகோதரர்களுக்கு தோள் கொடுக்கவும், அனைத்து பத்திரிகையாளர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என அழைக்கிறோம்' என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று திட்டமிட்டபடி சென்னை பத்திரிகையாளர் மன்ற அலுவலக வளாகத்தில் அதன் நிர்வாகிகள் 'விசாரணை என்ற பெயரில் பத்திரிகையாளர்களை அச்சுறுத்துவதை நிறுத்து; பறிமுதல் செய்த செல்போன்களை உடனே திருப்பிக் கொடு' என்ற பதாகைகளை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சார்ந்த செய்திகள்