கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள குன்னத்தூர் மற்றும் இதனைச் சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள், விவசாயிகள் தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக உளுந்தூர்பேட்டை - திருக்கோவிலூர் ஆகிய நகரங்களுக்கு நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது. இதனால் போக்குவரத்து செலவு மற்றும் காலவிரயம் அதிகமானது. இப்பகுதி மக்கள் விவசாயத்தை முழுவதுமாக நம்பி உள்ளனர். அவர்கள் விவசாய வேலைகளை விட்டுவிட்டு காய்கறி வாங்க கூட நகரத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார்கள். மேலும் காய்கறிகளை நகரங்கள் நோக்கி கொண்டு சென்று பெரும் வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு விற்றனர்.
இதனால் உற்பத்திக்கு செலவு செய்த தொகையைக் கூட ஈடுகட்ட முடியாமல் நஷ்டம் அடைந்தனர். இதன் அடிப்படையில் அப்பகுதியைச் சேர்ந்த சிறு விவசாயிகள் ஒன்று சேர்ந்து காய்கறி சந்தை அமைத்துள்ளனர். சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தன்னுடைய விவசாய நிலத்தில் உற்பத்தி செய்த காய்கறிகளை அவரது பகுதியில் விற்பனைக்கு கொண்டு சென்றும் அங்கு விற்பனை ஆகவில்லை. அவர் குன்னத்தூர் சுற்றியுள்ள பகுதிக்கு கொண்டு வந்து விற்பனை செய்ய முடிவு செய்து அதன்படி குன்னத்தூர் குளக்கரை அருகே சிறிய அளவில் இடத்தை சுத்தம் செய்து அங்கு காய்கறிகளை விற்பனை செய்தார்.
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்பதால் ஒரு மணி நேரத்தில் அவருடைய விளைப் பொருட்கள் அனைத்தும் விற்பனையானது. மீண்டும் ஒரு வாரம் கழித்து சனிக்கிழமை அன்று மாலை பொருட்களை விற்பனை செய்ய திட்டமிட்ட அவர் கூடவே தமக்கு தெரிந்த வேறு சில காய்கறி வியாபாரம் செய்யும் நபர்களையும் அழைத்து வந்து சிறிய அளவில் கடைகளை அமைத்தார். அப்பகுதி மக்கள் அங்கு வருகை புரிந்து காய்கறிகளை வாங்கிச் சென்றனர். இதன் பிறகு காய்கறி வியாபாரிகள் சனிக்கிழமை தோறும் அப்பகுதியில் கடை அமைத்தார்கள். பொதுமக்களும் சனிக்கிழமை தோறும் காய்கறிகளை வாங்குவது அதிகரித்தது. அதன் பிறகு அது சனிக்கிழமை வாரச் சந்தையாக தானே உருவெடுத்தது. எந்த விழாவும் எடுக்காமல் எந்த அறிவிப்பும் இல்லாமல் தானாகவே உருவான காய்கறி வாரச் சந்தைக்கு சனிக்கிழமை தோறும் சுற்றியுள்ள கிராம மக்கள் தங்கள் விவசாய நிலத்தில் விளையும் பொருட்களை தாங்களே நேரடியாக சனிக்கிழமை வாரச் சந்தைக்கு நேரடியாகக் கொண்டு வந்த விற்பனை செய்யத் தொடங்கிவிட்டனர்.
தற்பொழுது இந்த வாரச் சந்தை மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. குன்னத்தூர் மற்றும் அதன் சுற்றியுள்ள கிராம மக்கள் நேரடியாக தங்கள் உற்பத்தி செய்த காய்கறிகளை நிறைவாக விற்பனை செய்து வருகின்றனர். அதேபோல் பொதுமக்களும் மகிழ்ச்சியோடு காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர் என்று மகிழ்ச்சியோடு தெரிவிக்கின்றனர் விவசாயிகள். காய்கறி வாங்குவதற்கு சந்தைக்குச் செல்ல அருகில் நகரங்களுக்குச் செல்ல வேண்டியதில்லை. குன்னத்தூரில் இந்த சந்தை உருவானதன் மூலம் இப்பகுதி குட்டி காய்கறி நகராக மாறிவிட்டதாக மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.