சிதம்பரம் நகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வியாழன் மாலை திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் வேன் மூலம் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், " திமுக ஆட்சி பொறுப்பேற்ற போது உச்சத்தில் இருந்த கரோனா பரவல், கரோனா தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு தற்போது கரோனா கட்டுக்குள் வந்துள்ளது. இந்தியாவிலேயே கரோனா வார்டுக்கு சென்று நோயாளிகளிடம் நலம் விசாரித்த ஒரே முதல்வர் தமிழக முதல்வர் தான்.
கடந்த இரண்டு நாட்களாக சுற்றுப்பயணத்தில் நான் மக்களை சந்தித்து வருகிறேன். போகிற இடங்களில் எல்லாம் மக்கள் எழுச்சியுடன் அதிக அளவில் கூடுகின்றனர். அதில் அதிக அளவில் பெண்கள் உள்ளனர். திமுக ஆட்சி ஏற்றவுடன் வாக்குறுதி கொடுத்தபடி கரோனா நிதியாக ஒரு குடும்ப அட்டைக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டது. பெண்களுக்கு இலவச பேருந்து வசதி, ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு, கூட்டுறவு கடன் தள்ளுபடி, இல்லம் தேடி கல்வி திட்டம், மக்களை தேடி மருத்துவம், விபத்தில் சிக்கியவர்களை 24 மணி நேரத்தில் காப்பற்ற விபத்து உயிர் காக்கும் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அரசு கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என போராடினார்கள். அவர்களிடம் நான் வாக்குறுதி கொடுத்ததின் பேரில் தற்போது அவர்களுக்கு அரசுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சிதம்பரம்- அண்ணாமலை நகர் பகுதிகளில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்த ரூ 127 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிதம்பரத்தில் அதிமுக ஆட்சியில் ஆக்கிரமிப்பு என இடிகப்பட்ட வீடுகளுக்கு புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். திமுக இந்துக்களுக்கு விரோதக் கட்சி என கூறி வந்தனர். ஆனால் திமுக ஆட்சி ஏற்றப் பிறகு தான் அதிக கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டது. பாராளுமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, திமுக இருக்கும் வரை தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்க முடியாது என்று கூறியுள்ளார். இதிலிருந்து பாஜகவிற்கு திமுக சிம்ம சொப்பனமாக இருக்கிறது என்பது தெளிவாகிறது .
உள்ளாட்சியில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. திமுகவின் சாதனைகளை பெண்கள் வீடுவீடாக மக்கள் மத்தியில் கூறி உள்ளாட்சியில் நம் ஆட்சி மலர அனைவரும் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார். திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தின் போது தெற்கு வீதியில் மேடை அமைக்கப்பட்டு சிதம்பரம் நகரட்சி 33 வார்டுகளிலும் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக்கட்சி வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். அமைச்சர்கள் எம்ஆர்கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன், எம்எல்ஏ சபாராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏ சரவணன் மற்றும் திமுக கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.