பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவதால், விரக்தி அடையும் புகார்தாரர்கள் கவன ஈர்ப்புக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தற்கொலை முயற்சியில் ஈடுபடும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சேலம், தாசநாயக்கன்பட்டி ராமகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் விஜயா (40). இவருடைய மகள் மகேஸ்வரி (20). இவர்கள் இருவரும் திங்கள்கிழமை (ஏப். 25) காலை, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். நுழைவு வாயில் வரை வந்த அவர்கள் திடீரென்று, மறைத்து வைத்து இருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து தங்கள் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றனர்.
அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், பாய்ந்து சென்று அவர்களிடம் இருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை பிடுங்கி வீசினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் மீது குடம் குடமாக தண்ணீர் ஊற்றினர்.
அவர்களிடம் நடத்திய முதல்கட்ட விசாரணையில், விஜயா, கணவரால் கைவிடப்பட்டவர் என்பது தெரிய வந்தது. அவருக்குச் சொந்தமாக பூர்வீக சொத்து உள்ளது. விஜயாவின் சகோதரியும், அவருடைய கணவரும் பூர்வீக சொத்தை ஆக்கிரமித்துக் கொண்டதோடு, விஜயா குடியிருந்து வரும் வீட்டையும் காலி செய்யும்படி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.
இது தொடர்பாக அம்மாபேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த தாயும், மகளும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றது விசாரணையில் தெரிய வந்தது. இதுகுறித்து காவல்துறையினர் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகின்றனர்.
காவல்துறை அலட்சியம்:
திங்கள்கிழமைதோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம் நடந்து வருகிறது. இங்கு மனு கொடுக்க வரும் பொதுமக்கள், அதிகாரிகள், ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக தற்கொலை முயற்சி சம்பவங்களில் ஈடுபடுவது தொடர்ந்து அதிகரித்துள்ளது. அதேநேரம், காவல்நிலையங்களில் புகார் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படாமல் அலட்சியம் காட்டுவதால்தான் மக்கள் குறைதீர் முகாம்களில் கோரிக்கை மனு கொடுப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.