தமிழ்நாடு கைத்தறித்துறை அமைச்சராக இருப்பவர் ராணிப்பேட்டை தொகுதி எம்.எல்.ஏவான ஆர்.காந்தி. இவரது அரசியல் உதவியாளரான ராஜசேகர், ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் காவல்நிலையத்தில் ஒரு புகார் தந்துள்ளார். அதில், கடந்த 21.01.2023 அன்று காலை 10.57 மணிக்கு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி சென்னையிலிருந்து காவேரிப்பாக்கம் வந்து கொண்டிருந்தபோது அமைச்சரின் கைப்பேசி எண்ணுக்கு 9385349*** என்ற எண்ணிலிருந்து மிஸ்டு கால் வந்தது.
மீண்டும் 11.02 மணிக்கு அதே எண்ணில் அமைச்சரின் கைப்பேசி எண்ணிற்கு தொடர்பு கொண்ட நபர், ‘வழக்கறிஞர் வில்சன் பேசுவதாகவும் நீ இராணிப்பேட்டை மாவட்டமா? திமுக எம்.எல்.ஏ.வா? அதிமுக எம்.எல்.ஏ.வா? இராணிப்பேட்டை சாமுவேல் என்னிடம் பணம் வாங்கிவிட்டான். பணம் தரமாட்டேன்கிறான், உன்னிடம் கேட்டால் எல்லா தகவலும் கிடைக்கும்’ என்று ஒருமையில் கனத்த குரலுடன் பேசி உள்ளார்.
அதற்கு அமைச்சர், ‘நீங்கள் யார் உங்களுக்கு என்ன வேண்டும்’ என்று கேட்டபோது, மீண்டும் அந்த நபர், ‘நான் கேட்கிற டீட்டயல்ஸ்க்கு பதில் சொல்லு’ என்று அவமதிக்கும் வகையில் ஒருமையில் பேசியுள்ளார். மேற்படி நபர் எங்கிருந்து பேசினார் யார் என்ற உண்மை விவரம் தெரிவிக்க மறுத்ததுள்ளார். எனவே அமைச்சரிடம் எந்த வித முகாந்திரமும் இன்றி ஒருமையில் பேசிய நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு அந்தப் புகாரில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபாசத்யனுக்கு அமைச்சர் தரப்பு தொடர்புகொண்டு விவரத்தைக் கூறியுள்ளது. இந்நிலையில் தனி டீம் அமைத்து போன் வந்த செல் நம்பரை ட்ரேஸ் செய்தனர். அந்த எண்ணுக்கு உரியவர் பாலாஜி(31) என்பதும், அவர் சென்னை கொண்டித்தோப்பு பகுதி, கண்ணன் நாயுடு தெருவில் போலீஸ் குடியிருப்பு அருகில் வசித்து வருவதும் தெரியவந்தது. அதேபோல், சென்னை திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த கோகுல் (25) என்பவருக்கும் இதில் தொடர்பு இருப்பதைக் கண்டறிந்தனர். அதனைத் தொடர்ந்து ஜன. 23ம் தேதி இருவரையும் போலீசார் கைது செய்தனர்.