ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலத்தைச் சேர்ந்தவர் அருள் ஜீவா வயது 32. இவர், ‘வில் அம்பு’ பயிற்சியாளராக உள்ளார். இவர் தமிழகத்தின் பல பகுதிகளுக்கு சென்று மாணவ மாணவிகளுக்கு வில் அம்பு பயிற்சி அளித்து வருகிறார். இவர் தற்போது செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் தங்கி அப்பகுதியில் உள்ள மாணவ மாணவிகளுக்கு வில் அம்பு பயிற்சி அளித்து வருகிறார். நேற்று முன்தினம் விழுப்புரத்தில் உள்ள சில மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளிப்பதற்கு விழுப்புரம் வந்துள்ளார்.
பயிற்சி அளித்து முடித்தவுடன் தனது டூவீலரில் சிங்கப்பெருமாள் கோவிலுக்கு புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தார். திண்டிவனம் அருகிலுள்ள சாரம் பகுதியில் இவரது பைக் சென்று கொண்டிருந்தபோது மழை பெய்துள்ளது. மழையில் நனையாமல் இருப்பதற்காக சாலையோரம் இருந்த ஒரு கட்டிடத்தில் ஒதுங்கினார் அருள் ஜீவா. அந்தக் கட்டிடத்தில் திருநங்கைகள் இருவர் ஏற்கனவே நின்றிருந்தனர்.
அவர்கள் ஜீவாவிடம் பேச்சு கொடுத்துள்ளனர். பிறகு அங்கிருந்து கிளம்பிய அருள் ஜீவா தனது பைக்கை எடுத்துக் கொண்டு சிங்கப்பெருமாள் கோவில் நோக்கி புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். அங்கு சென்றதும் தன் கழுத்தில் கிடந்த தங்கச் செயினை காணாமல் திடுக்கிட்டார். அவருக்கு திருநங்கைகள் மீது சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர் மீண்டும் ஒலக்கூர் காவல் நிலையத்திற்கு வந்து அங்கிருந்த போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அருள் ஜீவாவிடம் பேச்சுக் கொடுத்த அந்த இரு திருநங்கைகளையும் தேடி கண்டுபிடித்தனர். ரெஜினா வயது 29, பாரதி வயது 34 ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை செய்ததில் ஜீவாவின் தங்க செயினை திருடியதை ஒப்புக் கொண்டுள்ளனர். இது சம்பந்தமாக ஒலக்கூர் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.