சந்தன கடத்தல் வீரப்பன் கூட்டாளிகள் இருவர் விடுதலை..!
ஈரோடு மாவட்டம், தாளவாடி வனச்சரகம் மசக்கால் மொக்கை என்ற இடத்தில், யானை வேட்டையாடிக்கொண்டிருந்த போது மாதையன் (சந்தனமரக் கடத்தல் வீரப்பனின் அண்ணன்) பெருமாள், முனியன், கொளந்தைப்பையன் மற்றும் தாவுநாயக் என்ற ஐந்து பேரை தலைமாலை பகுதி வன அலுவலர் சிதம்பரம் கையும் களவுமாக பிடித்துள்ளார்.
இதையடுத்து பிடிப்பட்ட 5 பேரையும் தாளவாடி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். பின் உதவி ஆய்வாளர் ரங்கன் என்பவர் இந்த ஐந்துபேர் மீதும் வழக்கு பதிவு (தாளவாடி காவல் நிலைய குற்ற எண்:-85/1986, நாள்:-30.04.1986) செய்து, சத்திய மங்கலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடந்து அவர்களை சிறையில் அடைத்துள்ளார்.
பின்னர் பிணையில் வெளியே வந்த முனியன், தாவு நாயக், பெருமாள் மற்றும் கொழந்தைபையன் ஆகிய நால்வரும் மீண்டும் நீதிமன்றத்துக்கு வராமல் தலைமறைவாகி விட்டதால், அவர்கள் மீதான வழக்கு நின்றுவிட்டது. 1986-இல் இருந்தே சிறையில் இருந்த மாதையன் இந்த வழக்கில் இருந்து விடுதலை அடைந்து விட்டார். கொழந்தபையன், தாவு நாயக் என்ற இருவரும் இறந்து விட்டனர். தலைமறைவாக இருந்ததாக சொல்லப்பட்ட நால்வரில், கொளந்தபையன், தாசரி நாயக் என்ற இருவரும் இறந்து விட்டனர். மீதமிருந்த முனுசாமி மற்றும் பெருமாள் என்ற இருவரையும் 1994-ஆம் அண்டு சத்தியமங்கலம் போலீசார் கைது செய்தனர்.
இந்த இருவர் தொடர்பான வழக்கு 23-ஆண்டுகளாக சத்தியமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. எட்டு சாட்சிகள் விசாரிக்கப்பட்ட இவ்வழக்கில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், யானை வேட்டையாடிதாக தொடரப்பட்டுள்ள இவ்வழக்கில் தொடர்புடையதாக சொல்லப்படும் முனுசாமி (வயது-57), பெருமாள் (வயது-67) ஆகியோரை விடுதலை செய்து, குற்றவியல் நீதிமன்ற நடுவர் குமாரசிவம் உத்தரவிட்டார்.
- பெ.சிவசுப்பிரமணியம்