Skip to main content

இரவு காவலரை கட்டிப்போட்டு சித்திரவதை செய்த இருவர் கைது!

Published on 06/08/2021 | Edited on 06/08/2021

 

Two arrested for tying up and torturing night guard

 

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், விழுப்புரம் - பேரங்கியூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி பெண்ணையாற்றின் கரையில் அமைந்துள்ளது அரசு மேல்நிலைப்பள்ளி. ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் அமைதியான சூழ்நிலையில் அமைந்துள்ள இப்பள்ளியில், இரவு காவலராக வேலை செய்துவருபவர் முத்துக்குமரன். நேற்று முன்தினம் (04.08.2021) இரவு வழக்கம்போல் பள்ளிக்கூடத்தில் பணியில் இருந்துள்ளார். இரவு சுமார் 11 மணி அளவில் பள்ளிக்கு வந்த இருவர், காவலர் முத்துக்குமரனை தாக்கியுள்ளனர். மேலும், அவரது கை கால்களைக் கட்டிப் போட்டுவிட்டு பள்ளிக்கூடத்தின் அறை கண்ணாடியை உடைத்து உள்ளே புகுந்தனர்.

 

அங்கிருந்த கணிணி பிரிண்டர், மேஜை, நாற்காலி உள்ளிட்ட பொருட்களை அடித்துச் சூறையாடினர். பின்னர் அங்கிருந்து சகஜமாக வெளியே சென்றுள்ளனர். வழக்கம்போல் முத்துக்குமரன் இரவு காவல் பணியை முடித்துவிட்டு காலையில் வீட்டிற்கு வருவது வழக்கம். நேற்று வெகுநேரமாகியும் முத்துக்குமரன் வீட்டுக்கு வராததால் சந்தேகமடைந்த அவரது மனைவி புவனா, தனது கணவரை செல்ஃபோனில் தொடர்புகொண்டுள்ளார். அவரது ஃபோன் எடுக்கவில்லை. உடனடியாக பள்ளிக்கூடத்திற்குச் சென்று பார்த்துள்ளார். அங்கு அவரது கணவர் முத்துக்குமரன் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டு கை, கால்கள் கட்டப்பட்டு கிடந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த புவனா, தலைமையாசிரியருக்கும் போலீசாருக்கும் தகவல் அளித்துள்ளார்.

 

இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளனர். போலீசார் வழக்குப் பதிவுசெய்து இதுதொடர்பாக விசாரணை நடத்திவந்தனர். போலீசாரின் விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த ராமர், அன்பரசு ஆகிய இரண்டு பேரையும் கைது செய்துள்ளனர். இரவு காவலராக பணி செய்துவந்த முத்துக்குமரன், மேளக் கச்சேரி செய்பவர். இரவு நேரத்தில் மட்டும் பள்ளி காவலாளியாக வேலை பார்த்துள்ளார். அதேபோல் ராமர், அன்பரசு ஆகிய இருவரும் ஊர் ஊராகச் சென்று திருவிழாக்களில் மேளக் கச்சேரி தொழில் நடத்திவருகின்றனர். இதனால் இவர்களுக்குள் தொழில் போட்டி இருந்துள்ளது. அதன் காரணமாக இரவு காவல் பணியில் இருந்த முத்துக்குமரனை அன்பரசு, ராமுவும் கட்டிப்போட்டு சித்திரவதை செய்துள்ளனர் என விசாரணையில் தெரிவந்துள்ளது. இதையடுத்து ராமர், அன்பரசு ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் திருவெண்ணைநல்லூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்