Skip to main content

இருபத்தி நான்குமணி நேரமும், இரண்டு அகழாய்வு இடங்களும்!

Published on 09/10/2017 | Edited on 09/10/2017
இருபத்தி நான்குமணி நேரமும், இரண்டு அகழாய்வு இடங்களும்!

கீழடியில், மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகள் இன்று மூடப்பட்டன.

கீழடியில் மத்திய தொல்லியல் துறை சார்பில் தலைமையில் 2 ஆண்டுகள் அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன. அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் 2 ஆண்டுகள் நடைபெற்ற அந்த அகழாய்வுப் பணிகளில் சுமார், 2200 ஆண்டுகளுக்கும் அதிக தொன்மையான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தொல்லியல் பணிகளை சிறப்பாக செய்து வந்த, அமர்நாத் ராமகிருஷ்ணன் மத்திய அரசால் மாற்றப்பட்டார். அதன் பிறகு, அகழாய்வுப் பணிகளுக்கு ஸ்ரீராம் என்பவர் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டு அகழாய்வுப் பணிகள் தொடரப்பட்டன. இதையடுத்து 3ம் கட்ட அகழாய்வு அறிக்கையை அளித்த ஸ்ரீராம் கீழடியில் கட்டடங்களின் தொடர்ச்சி ஏதுமில்லை என தெரிவித்ததை அடுத்து, 3ம் கட்ட அகழாய்வுக்காக தோண்டப்பட்ட குழிகள் இன்று மூடப்பட்டன.

கீழடியில் 3ம் கட்ட ஆகழாய்வுக்கான குழிகள் மூடப்பட்டது குறித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்க பொதுச்செயலாளர் சு.வெங்கடேசன், அவரது முகநூல் பதவில் கூறியதாவது,

இருபத்தி நான்குமணி நேரமும், இரண்டு அகழாய்வு இடங்களும்.

நேற்று காலை குஜராத்தில் உள்ள தனது சொந்த ஊரான வாட் நகரில் தொல்லியல் துறை நடத்திக்கொண்டிருக்கிற அகழாய்வுப்பணியை பார்வையிட்டார் பிரதமர் நரேந்திர மோடி. அதன்பின் அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். ”வாட்நகரின் பழைய பெயர் ஆனந்தபூர். இங்கு அகழாய்வு செய்யவேண்டும் என்று நான் கூறினேன். அதனை மத்தியத் தொல்லியல் துறையினர் சிறப்பாக செய்துள்ளனர்.

இங்கு 2500 ஆண்டுகளுக்கு முன்பு பெரியநகரம் இருந்திருக்கிறது. அது அழிந்துவிடாமல் தொடர்ந்து இருந்துள்ளது. இந்நகருக்கு சீனாவில் இருந்து யுவான்சுவாங் வந்துள்ளார். பெருமைகொண்ட இந்நகரைக் கண்டறிந்ததற்காக தொல்லியல் துறைக்கு எனது மனப்பூர்வமான பாராட்டுக்கள்”என்று கூறியுள்ளார்.

வாட் நகர் போலவே 2014 ஆம் ஆண்டு அகழாய்வு தொடங்கப்பட்ட இடம் கீழடி. முதன்முறையாக சங்ககால நகரம் ஒன்று இங்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பெருங்கட்டிட அமைப்புகளும் தொழிற்கூடங்களும் விரிந்த அளவில் கிடைத்துள்ளன. பல பிராமி எழுத்துக்களும் எண்ணிலடங்காத தொல்பொருட்களும் கிடைத்துள்ளன.

நேற்று காலை பிரதமரால் பாராட்டப்பட்ட அதே தொல்லியல் துறை இன்று கீழடி அகழாய்வுக்குழியில் மண்ணள்ளிப் போட்டுக்கொண்டிருக்கிறது. ஆய்வாளர்களின் கூடாரங்கள் எல்லாம் பிரித்தெடுக்கப்பட்டுவிட்டன. கீழடியின் கதை முடிவுக்கு வருகிறது.

தனது சொந்த ஊரில் சிறப்பாக ஆய்வு நடத்தியதற்காக மத்திய தொல்லியல் துறையை பிரதமர் பாராட்டலாம். ஆனால் கீழடி அகழாய்வினை எல்லாவகையிலும் சீர்குலைத்து இறுதியாக மூடுவிழாவை நடத்தியுள்ள மத்திய தொல்லியல் துறையை நாம் என்ன செய்யலாம்? தொலைக்காட்சி ஒன்றில் நான் இப்படி பேசியதை கேட்ட நண்பர் ஒருவர் கைபேசியில் அழைத்து, “பிரதமரின் மனதுக்கு நெருக்கமான ஒரு துறை 24 மணி நேரத்தில் இரண்டுமுறை பாராட்டைப் பெறுவது சட்டப்படி குற்றமா?”எனக் கேட்டார். வாட் நகருக்கு யுவான்சுவாங் வந்ததையெல்லாம் தெரிந்துவைத்துள்ள பிரதமருக்கு சட்டம் தெரியாமலா இருக்கும்? இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

சார்ந்த செய்திகள்