விழுப்புரம் மாவட்டம், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தளவானூர் என்ற இடத்தில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சுமார் ரூபாய் 25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட தடுப்பணை கடந்த ஆண்டு உடைந்தது; மீண்டும் கடந்த நவம்பர் 9- ஆம் தேதி அந்த அணைக்கட்டின் கரை மழை வெள்ள நீரின் காரணமாக அரிப்பெடுத்து அடித்துச் செல்லப்பட்டது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் நவம்பர் 10- ஆம் தேதி மணல் மூட்டைகள் கருங்கற்கள் அடுக்கி கரையின் அரிப்பை தடுக்க முற்பட்டனர். ஆனால், ஆற்று நீர் கரையை உடைத்துக்கொண்டு 50 மீட்டர் தூரத்திற்கு சென்று நிலத்துக்குள் புகுந்தது, இதை அடுத்து கரைப்பகுதி மேற்கொண்டு உடையாமல் தடுப்பதற்காக ஏற்கனவே உறைந்து சேதமடைந்த தடுப்பணை பகுதியை வெடி வைத்து தகர்த்து தண்ணீரில் செல்லும் பாதையை நேராக திருப்பி விட்டு கரை அரிப்பை தடுக்க முடிவு செய்தனர்.
இதற்காக, பொதுப்பணித்துறை தலைமை செயற்பொறியாளர், முத்தையா, தலைமைப் பொறியாளர் ராஜேந்திரன் உட்பட 10- க்கும் மேற்கொண்ட பொதுப்பணித்துறை குழுவினர், சேதமான அணைக்கட்டுப் பகுதியில் நேற்று காலை ஆய்வு செய்தனர். இதன் பிறகு வெடி வைத்து தகர்க்கும் ஊழியர்கள் 7 பேர் வரவழைக்கப்பட்டு, இதற்காக 100 ஜெலட்டின் குச்சிகள் 200 தோட்டாக்கள் கொண்ட வெடி மருந்துகள் மிகுந்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டு உடைந்த சேதமான அணைக்கட்டு விரிசல் பகுதிகளில் உள்ள இடைவெளியில் புகுத்தி பணிகளை முடித்து காலையில் மாவட்ட ஆட்சியர் மோகன் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு பிறகு அணைக்கட்டில் வைக்கப்பட்ட வெடியை வெடிக்குமாறு அறிவுறுத்தினர்.
அதன்படி, ஜெலட்டின் குச்சிகள் வெடிக்கச் செய்யப்பட்டன. ஆனால் சற்றும் அசையாமல் சாய்ந்த நிலையிலேயே நின்றது. இதையடுத்து, சேதமடைந்த பகுதியை மேற்கொண்டு எந்த இடத்தில் வெடித்தால் முற்றிலும் இடிந்து விழும் என்பதை சரியாக ஆய்வு செய்து கண்டறிந்து, அதன்படி வெடிக்குமாறு மாவட்ட ஆட்சியர் உட்பட அதிகாரிகள் அறிவுறுத்தி விட்டு சென்றுள்ளனர். இதையடுத்து மீண்டும் அணைக்கட்டை வெடி வைத்து முற்றிலும் தகர்க்கும் பணியில் ஈடுபட உள்ளனர்.