வத்தலக்குண்டு - உசிலம்பட்டி சாலையில், வத்தலக்குண்டு சார்பு ஆய்வாளர் ஷேக் அப்துல்லா வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது உசிலம்பட்டியில் இருந்து வத்தலக்குண்டு நோக்கி வந்த காரை சோதனையிட்டபோது, அதில் கட்டுக்கட்டாக கருப்புத் தாள்களும் பிளாஸ்டிக் பேரல் ஒன்றும் இருந்துள்ளன. காரை ஓட்டி வந்த நபரிடம் விசாரித்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். சந்தேகமடைந்த போலீஸார் காரில் இருந்த பிளாஸ்டிக் பேரலைத் திறந்து பார்த்தபோது, அதில் சில 2000 ரூபாய் நோட்டுகள் மிதந்துகொண்டிருந்தன.
மேலும் சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தியபோது, அந்த நபர் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த நல்லமலை என தெரியவந்தது. நல்லமலையிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. தான் வைத்துள்ள கருப்பு காகிதத்தைத் தானே தயாரித்த திரவத்தில் நனைத்து எடுத்தால், அது இரண்டாயிரம் ரூபாய் நோட்டாக மாறும் என தன்னிடம் ஏமாறும் நபர்களை நல்லமலை நம்ப வைத்துள்ளார். நம்பும் விதமாக ஏற்கனவே அந்தத் திரவ பேரலில் ஒரிஜினல் 2000 ரூபாய் நோட்டுகளைப் போட்டு வைத்து விடுவானாம். தன்னை நம்பி வருபவரிடம் கருப்பு காகிதத்தைத் திரவத்தில் மூழ்கி எடுப்பது போல் உள்ளே விட்டுவிட்டு, ஏற்கனவே தான் போட்டு வைத்திருந்த ஒரிஜினல் 2000 ரூபாய் நோட்டை எடுத்து கையில் கொடுத்து விடுவானாம்.
பின்னர் அந்தக் கருப்பு காகித நோட்டுகளையும், திரவத்தையும் வாங்க பேரம் தொடங்கிவிடும். தற்போது இவன் பேச்சை நம்பி ஏமாற தயாராக இருந்த ஒரு நபருக்கு கருப்புக் காகிதத்தைக் கொண்டு செல்லும் வழியில்தான் வத்தலக்குண்டு போலீசாரிடம் நல்லமலை சிக்கிக்கொண்டார். கட்டுக்கட்டாக கருப்பு காகித நோட்டுகளைப் பறிமுதல் செய்த போலீஸார், அவன் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். நல்லமலை மீது தேனி, திருநெல்வேலி மாவட்டங்களில் கள்ளத்துப்பாக்கி வைத்திருந்தது உள்ளிட்ட பல்வேறு மோசடி வழக்குகள் இருப்பதாக விசாரணையில் தெரிய வந்தது. நல்லமலையை கைது செய்த போலீஸார் நிலக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.