மது பாட்டில்களில் நாட்டுக்கும் வீட்டுக்கும் உயிருக்கும் கேடு எனக் குறிப்பிட்டு இருந்தாலும் இந்தச் சமுதாயத்தில் மது என்பது ஒரு பிரதானப் பொருளாக மாறிவிட்டது. வீட்டு விசேஷங்களில் தொடங்கி சமுதாயத்தில் நடக்கும் நல்லது கெட்டது என எதுவாக இருந்தாலும் அங்கு மது என்பது மது பிரியர்கள் மத்தியில் முக்கியப் பங்காக உள்ளது.இப்படிப்பட்ட சூழலில் நாட்டையே அச்சுறுத்தும் கரோனாவில் இருந்து மக்களைப் பாதுகாத்துக் கொள்ள கடந்த 24-ம் தேதி நள்ளிரவில் இருந்து ஏப்ரல் 14-ம் தேதி வரை நாடு முமுவதும் ஊரடங்கு பிறப்பிக்கபட்டது.இதில் அத்தியாவசியப் பொருட்கள் தவிர மதுக் கடைகள் உட்பட குறிப்பிட்ட சில அரசு நிறுவனங்கள் மற்றும் அனைத்து தனியார் நிறுவனங்களும் மூடப்பட்டன.இதனால் மது இல்லாமல் முடங்கிக் கிடக்கும் குடிமகன்கள், டாஸ்மாக் கடைகளுக்குள் புகுந்து திருடும் அளவிற்கு வந்து விட்டது.
இந்த நிலையில், டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களை மது இல்லாமல் இருக்கும் குடிமகன்களிடம் இருந்து பாதுகாக்க திருச்சி மாநகராட்சி ஒரு புதிய முயற்சியை எடுத்துள்ளது. மேலும் டாஸ்மாக் கடைகளுக்குத் தனித்தனியாக பாதுகாப்பிற்குப் போலீஸ் போடுவது சிரமம் என்று கூறப்படுகிறது.இதனால் டாஸ்மாக் கடைகளில் இருக்கும் மதுபாட்டில்களை எல்லாம் ஒரே இடத்தில் வைத்து பாதுகாக்க முடிவு செய்துள்ளது.இதனால் போலீசாரின் உதவியுடன் டாஸ்மாக் கடைகளில் இருந்த மதுபாட்டில்கள் அனைத்தும் ஒரு மண்டலத்துக்கு கொண்டு வரப்பட்டு அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இந்த முயற்சியை அனைத்து மாவட்டங்களிலும் முயற்சி செய்ய டாஸ்மாக் நிர்வாகம் ஆலோசித்து வருவதாகச் சொல்லப்படுகிறது.