திருச்சி துறையூர் நகர் பகுதிகளில் கஞ்சா விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக நகர்மன்ற கூட்டத்தில் வார்டு உறுப்பினர் ஒருவர் கடந்த வாரம் புகார் எழுப்பியிருந்தார். மேலும் இது குறித்து காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து துறையூர் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் காவல்துறையினர் தொடர்ந்து துறையூர் பேருந்து நிலையம் பாலக்கரை மற்றும் முக்கிய இடங்களில் சோதனை செய்து வந்தனர். இதற்கிடையே தனிப்படை போலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டு நேற்று(5.8.2022) பாலக்கரை அருகே சோதனை செய்தபோது பச்சை பெருமாள்பட்டி பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகனான அருண்குமார் காரில் 2 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இதனை அடுத்து அதிரடியாக காவல்துறையினர் அருண்குமாரை கைது செய்ததோடு, கஞ்சா மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.
இவர் தனது சொந்த ஊரில் இருந்து துறையூருக்கு வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்திருக்கிறார். துறையூர் காவல் நிலைய போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். கஞ்சா விற்பனை தொடர்பாக கடந்த ஒரு மாதத்தில் யாரும் கைது செய்யப்படாத நிலையில் தனிப்படை போலீசார் 2 கிலோ கஞ்சாவையும், அதைக் கடத்தி வந்த நபரையும் அதிரடியாக மடக்கிப் பிடித்த சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு காவல்துறை மீது நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.