அரசு அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரிகள் வீடுகளில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனைகளை மேற்கொண்டு பல்வேறு ஆவணங்களைக் கைப்பற்றி உள்ளனர்.
திருச்சி காஜாமலை பிச்சையம்மாள் நகர் பகுதியில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி கலைமணி (வயது 72). இவருடைய மகள் ஆர்த்தி வேலூர் மாவட்டத்தில் திட்ட இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். ஆர்த்தியின் கணவர் ஆனந்தமூர்த்தி சென்னையில் வருவாய் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். அவரது மகள் ஆர்த்தி மற்றும் மருமகன் ஆனந்தமூர்த்தி ஆகிய இருவரும் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரை அடுத்து சென்னை, தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் இன்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள ஆர்த்தியின் தந்தையும் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியுமான கலைமணி வீட்டில் திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் 3 பேர் என சோதனை நடைபெற்று வருகிறது. அதில் கடந்த 2013 ஆம் ஆண்டு சூரியூர் பகுதியில் 72 ஏக்கரில் கோழி பண்ணை அமைக்க இடம் வாங்கியது உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.