திருச்சி மாவட்டத்தில் கடந்த 4 வாரங்களாக மாபெரும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன. நேற்று (10.10.2021) 5வது வாரமாக மாபெரும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அதன்படி திருச்சி மாநகரில் 198 இடங்களிலும் இரண்டு நடமாடும் குழுக்கள் மூலம் ஊரகப் பகுதிகளில் 418 இடங்களிலும் இந்த முகாம் நடைபெற்றது.
காலை முதலே பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு தடுப்பூசிகளைப் போட்டு சென்றனர். திருச்சி - வேலூர் சாலையில் உள்ள பிஷப் ஹீபர் கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் தடுப்பூசி முகாமை அமைச்சர் கே.என். நேரு பார்வையிட்டார். அப்போது பணியின்போது மரணமடைந்த அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை அமைச்சர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நேற்று மட்டும் திருச்சி மாவட்டத்தில் இரவு 7.30 மணி நிலவரப்படி 46 ஆயிரத்து 228 பேர் முதல் தவணைத் தடுப்பூசியும், 44 ஆயிரத்து 466 பேர் இரண்டாவது தவணை தடுப்பூசியும் என மொத்தம் 90 ஆயிரத்து 684 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். தமிழ்நாடு அளவில் நடைபெற்ற முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கையில், திருச்சி மாவட்டம் 4வது இடத்தைப் பெற்றுள்ளது.