திருச்சி மாவட்டத்தில் கஞ்சா ஒழிப்பில் போலீசார் தீவிரம் காட்டிவருகின்றனர். இதற்கென மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன், மாவட்ட எஸ்.பி. மூர்த்தி ஆகியோரின் கண்காணிப்பில் திருவெறும்பூர் டி.எஸ்.பி. சுரேஷ்குமார், நவல்பட்டு இன்ஸ்பெக்டர் வெற்றிவேல், மணிகண்டம் எஸ்.ஐ. செந்தில் உள்ளிட்டவர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது .
இந்த தனிப்படை 24 மணி நேரமும் கஞ்சா விற்பனை தொடர்பான கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். இதன் காரணமாக திருச்சி மணிகண்டம் பகுதியைச் சேர்ந்த நைனார் முகமது என்கிற மிகப்பெரிய கஞ்சா வியாபாரியைப் பிடிக்க முனைப்பு காட்டப்பட்டது. இதன் காரணமாக அவருடைய கும்பலைச் சேர்ந்த மகாமுனி, லியோ, சதீஸ், மணிகண்டன், பரணி ஆகியோர் வரிசையாக தனிப்படையிடம் பிடிபட்டனர்.
நைனார் முகமது மட்டும் சிக்காமல் தனது ஜதையை புதுக்கோட்டைக்கு மாற்றினார். இருப்பினும் புதுக்கோட்டை போலீசாருக்கு இங்கிருந்தபடியே திருச்சி போலீசார் தகவல் அளித்ததின் பேரில், விராலிமலை பகுதியில் நைனார் முகமதுவுடன் தொடர்புடைய இரண்டு கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். தனது கும்பல் அனைவரும் சிக்கியதை தொடர்ந்து வேறு வழியின்றி நைனார் முகமதுவே நேரிடையாக கஞ்சா விற்பனைக்கு வந்தார். இதனை எதிர்பார்த்தே இத்தனை நாட்களும் செயல்பட்ட தனிப்படை காவல்துறையினர், நினைத்தது நடந்துவிட்டதை எண்ணி அவரைப் பிடிக்க கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுவந்தனர்.
அவர்கள் திட்டமிட்டபடியே நாகமங்கலத்தில் கஞ்சாவைக் கைமாற்ற வந்த நைனார் முகமதுவை சுற்றி வளைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மிகப்பெரிய கஞ்சா கூட்டத்தைத் திட்டம் தீட்டி படிப்படியாக கைது செய்து மிகப்பெரிய கஞ்சா சாம்ராஜ்யத்தையே திருச்சி மாவட்ட தனிப்படை போலீசார் தரைமட்டமாக்கியுள்ளனர்.