திருச்சி மாவட்டம் நாவலூர் குட்டப்பட்டு பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
நாவலூர் குட்டப்பட்டு பகுதியில் உள்ள அரவாயி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜையும், அதையடுத்து அடைக்கல மாதா தேவாலய ஜெபமும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியை ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி, மணிகண்டம் திமுக ஒன்றியச் செயலாளர் கருப்பையா ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
முதலில் உள்ளூர் மாடுகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. அதனைத் தொடர்ந்து திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள 725 ஜல்லிக்கட்டு காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டு வருகின்றன. முன்னதாக காளைகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் முறையான மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.
இப்போட்டியில், 700 காளைகள் சீறிப்பாய்ந்து வரும் நிலையில், காளைகளை அடக்க 350 மாடுபிடி வீரர்கள் ஒரு பிரிவுக்கு 50 வீரர்கள் என களம் காணுகின்றனர். முதல் சுற்றில், 50 மாடுபிடி வீரர்கள் களமிறங்கி உள்ளனர். காளைகளை அடக்க காளையர்களும், அடங்க மறுத்து காளைகளும் ஜல்லிக்கட்டு களத்தை உற்சாகப்படுத்தி வருகின்றன. போட்டியில் வீரர்களின் பிடிக்கு அடங்க மறுத்து வெற்றி பெறும் காளைகளுக்கும், காளைகளை அடக்கி வெற்றி பெறும் காளையர்களுக்கும் தங்கம் மற்றும் வெள்ளிக் காசுகள், பீரோ, கட்டில், அண்டா,கேஸ் அடுப்பு, கிரைண்டர், ரொக்கப்பணம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பரிசுகள் வழங்கப்படுகின்றன.
மாவட்ட கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் குற்றாலிங்கம், ஜீயபுரம், திருவெறும்பூர் துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் 380 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.