திருச்சி மாநகராட்சி பகுதியில் ஆங்காங்கே பாதாள சாக்கடைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகராட்சியின் 63- வது வார்டில் பாதாள சாக்கடைகள் அமைக்க சாலைகளில் ஆங்காங்கே குழிகள் தோண்டப்பட்டு புதிய பாதாள சாக்கடைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பாதாள சாக்கடை கட்டும் பணியானது கடந்த ஓர் ஆண்டுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் அந்த சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுவதோடு, சாலைகளைப் பயன்படுத்த முடியாமல் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அளவுக்கு அதிகமான மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக சாலைகள் காணப்படுகிறது. அப்பகுதி பொதுமக்கள் பாதாள சாக்கடைத் திட்டப்பணிகளை விரைந்து முடித்து சாலைகளை சீரமைத்து தரக்கோரி பலமுறை மாநகராட்சி ஆணையரிடம் மனு கொடுக்கப்பட்டும், எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
இன்று (20/12/2020) காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக சாலைகளில் மரக்கன்றுகளை நடும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று சாலைகளில் மரக்கன்றுகளை நட்டு மாநகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக தங்களுடைய கோஷங்களை எழுப்பினர்.