திருச்சி மாவட்ட ஆட்சிதலைவர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமிற்கு திருச்சி மாவட்டத்தில் உள்ள ஏராளமான பொதுமக்கள் தங்கள் பிரச்சனைகளை மனுக்களாக கொடுப்பார்கள்.
இந்த நிலையில் பார்வையற்றவர்கள் சிலர் வரிசையாக மனுக்களுடன் வந்து மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் பார்வையற்ற மாற்றுததிறனாளிகளுக்கு அரசு மாதந்தோறும் வழங்கி வரும் ரூ.1000 உதவி தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
தஞ்சை, புதுக்கோட்டை, சேலம் மதுரை ஆகிய மாவட்டங்களில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச கைபேசி வழங்கியது போல் திருச்சி மாவட்டத்திலும் வழங்க வேண்டும்.மேலும் இலவச வீடு அல்லது இலவச வீட்டுமனை வழங்க வேண்டும். மாற்று திறனாளிகளுக்கு 4 சதவீத வேலை வாய்ப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளில் இசை ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு கொடுத்தனர். பரிசீலனை செய்வதாக மாவட்ட ஆட்சித்தலைவர் மனுக்களை பெற்றுக்கொண்டார்.