சாலை ஓரங்களில் நடப்பட்ட மரக்கன்றுகள் கோடை வெயிலில் கருகும் நிலையில் பள்ளிக்குக் கொண்டு வரும் குடிதண்ணீரை குளுக்கோஸ் பாட்டில் மூலம் மரக்கன்றுகளுக்கு ஊற்றி வளா்த்து வருகிறார்கள் பள்ளி மாணவர்கள்.
கஜா புயலில் புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் சாலை ஓரங்களில் நிழல் கொடுத்துக் கொண்டிருந்த பழமையான மரங்களும் சாய்ந்து விழுந்து வெறிச்சோடிக் காணப்பட்டது. அதனால் கடந்த ஆண்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் சுமார் 25 ஆயிரம் மரக்கன்றுகள் வரை நெடுஞ்சாலைத்துறை மூலம் நட்டு கூண்டுகள் அமைத்தனர். அதே நேரத்தில் சமூக ஆர்வலர்களும் மரக்கன்றுகள் நட்டு வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில் நெடுஞ்சாலைத்துறையினர் நட்ட மரக்கன்றுகளுக்கு கோடை வெயிலில் தண்ணீர் ஊற்றாமல் கருகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் 4 மாவட்டங்களிலும் சுமார் ஒரு லட்சம் மரக்கன்றுகள் கருகி பயனற்று போகும் நிலை உருவாகி உள்ளது.
ஆனால் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி உட்கோட்டத்தில் நெடுஞ்சாலை பணியாளர்கள் தண்ணீர் ஊற்றி வருகிறார்கள். அதே நேரத்தில் திருவாரூர் மாவட்டத்தில் 12 கி.மீ தூரத்திற்கு கிரீன் நீடா அமைப்பினர் நட்ட 2100 மரப் போத்துகளுக்கும் அந்த அமைப்பினரே தன்னார்வலர்களின் நிதி உதவியுடன் தண்ணீர் ஊற்றி வருகின்றனர். இதனால் ஒரு முறை தண்ணீர் ஊற்ற ரூ. 5 ஆயிரம் வரை செலவாகிறது. அந்தச் செலவை சமாளிக்க முடியாமல் நன்கொடைகள் பெற்று தண்ணீர் ஊற்றி வருகிறார்கள்.
இது குறித்து நக்கீரன் இணையச் செய்தி வெளியான நிலையில் சில வாரங்களுக்கு தண்ணீர் ஊற்ற நன்கொடைகள் கிடைத்துள்ளது. இந்த நிலையில் தான் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள அலஞ்சிரங்காடு கிராமத்தில் கிராம சாலையில் குருகுலம் அறக்கட்டளை சார்பில் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த மரக்கன்றுகள் கருகிவிடாமல் வளர்க்க பள்ளிக்கு சென்று வரும் மாணவ, மாணவிகள் ஒவ்வொரு மரக்கன்றுக்கும் மருத்துவமனைகளில் பயன்படுத்தி தூக்கி வீசப்பட்ட குளுக்கோஸ் பாட்டில்களை எடுத்து வந்து மரக்கன்றுகளுடன் பொறுத்தி தாங்கள் குடிக்கக் கொண்டு வரும் குடிதண்ணீரை மரக்கன்றுகளுடன் பொறுத்தப்பட்டுள்ள குளுக்கோஸ் பாட்டில்களில் நிரப்பிச் செல்கின்றனர்.
எங்கள் பள்ளி நிர்வாகி குருகுலம் சிவநேசன் ஆலோசனைப்படி.. சீனாவில் இப்படித் தான் மரக்கன்றுகளை வளர்க்கிறார்கள். அதனால் தான் கோடை வெயிலைச் சமாளிக்க நாங்கள் குடிக்கக் கொண்டு வரும் தண்ணீரை இந்த மரக்கன்றுகளுக்கு குளுக்கோஸ் பாட்டில்கள் மூலம் செலுத்தி வருகிறோம் தண்ணீர் முடிந்துவிட்டால் பள்ளியில் உள்ள குடிதண்ணீா் தொட்டியில் இருந்து தண்ணீர் பிடித்து வருவோம் என்றனர் மாணவர்கள்.