செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர், ஆன்மீகவாதி என்ற போர்வையில் மாணவிகளைப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியது குறித்து அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவிகள் பரபரப்பு குற்றச்சாட்டுகளைத் தெரிவித்திருந்தார்கள். இதுதொடர்பான வழக்கில் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி போலீசார் சிவசங்கர் பாபாவை விசாரித்துவந்தனர்.
முதல் நாள் சிவசங்கர் பாபாவிடம் விடிய விடிய சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தினர். பள்ளி மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபாவிடம் விசாரணை நடைபெற்றது.
இரண்டாம் நாளான நேற்று (29.06.2021) கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளிக்கு அழைத்துச் சென்று சிவசங்கர் பாபாவிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தினர். அந்தப் பள்ளியில் குறிப்பிட்ட சொகுசு அறையில் வைத்து சிவசங்கர் பாபாவிடம் சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் சரமாரியாக கேள்வி எழுப்பினர். மாணவிகளுக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்தீர்களா? அதேபோல் சொகுசு அறைக்கு யாருடைய உதவியின் மூலம் மாணவிகளை அழைத்து வந்தீர்கள். இதற்கு ஆசிரியர்கள் உதவி செய்தார்களா என பல்வேறு கேள்விகள் சிவசங்கர் பாபாவிடம் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் மாணவிகளுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களைக் காட்டியும், ஆபாச எஸ்.எம்.எஸ்கள் குறித்தும் சிவசங்கர் பாபாவிடம் துருவித் துருவி கேள்வி எழுப்பப்பட்டது. நேற்று கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் பள்ளியிலேயே வைத்து விசாரணை நடைபெற்றது. சிவசங்கர் பாபாவிடம் பெறப்பட்ட வாக்குமூலம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிவசங்கர் பாபா மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முன்னதாக 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அவர் காவலில் எடுக்கப்பட்டிருந்த நிலையில், இரண்டு நாட்களிலேயே அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இரண்டு நாள் விசாரணையிலேயே போதுமான ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளதாக சி.பி.சி.ஐ.டி போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் முழு ஒத்துழைப்பு தந்த நிலையில் உடல்நிலை கருதி சிவசங்கர் பாபா சிறையில் அடைக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை தந்தது பற்றி சிவசங்கர் பாபாவிடமிருந்து ஏற்கனவே ஒரு லேப்டாப் சிக்கிய நிலையில், சொகுசு அறையில் மேலும் ஒரு லேப்டாப் மற்றும் பென் ட்ரைவ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேபோல் சுசி ஹரி பள்ளி இ-மெயில் முகவரி மூலம் சிவசங்கர் பாபா மாணவிகளிடம் ஆபாசமாகப் பேசி வந்துள்ளது தெரியவந்துள்ளது. மாணவிகளுக்கு சிவசங்கர் பாபா ஆபாசமாக சாட் செய்ததற்காக ஆதாரமும் கைப்பற்றப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட யாஹூ மெயில் ஐடியில் அவர் ஆபாசமாக பேசி வந்தது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக அந்த இ-மெயில் ஐடியை சைபர் ஆய்வகம் மூலம் ஆய்வு செய்ய சி.பி.சி.ஐ.டி போலீசார் திட்டமிட்டுள்ளனர். சிவசங்கர் பாபா பல ஆண்டுகளாக ஆபாசமாக பேச பயன்படுத்திய யாஹூ மெயில் ஐடியை போலீசார் முடக்கியுள்ளனர்.