திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி கிராமிய காவல் நிலைய ஆய்வாளராக மங்கையர்க்கரசி. கரோனா காலத்தில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியதில் முக்கியப் பங்கு வகித்தவர். அவரும் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின்பு மீண்டுவந்து பணியாற்றிவருகிறார். இந்நிலையில், அவர் திடீரென திருவண்ணாமலை மாவட்டம் கடலாடி காவல் நிலையத்துக்கு, டிசம்பர் 22ஆம் தேதி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
டிசம்பர் 23ஆம் தேதி வாணியம்பாடி ஜாப்ராபாத் பகுதியில் தி.மு.க. நடத்திய கிராமசபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட மக்கள், காவல் நிலையப் பெண் ஆய்வாளரை இடமாற்றம் செய்ததைக் கண்டித்துத் தீர்மானம் இயற்றி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து நாம் விசாரித்தபோது, கடந்த 20ஆம் தேதி ஆம்பூர் தொகுதிக்கு உட்பட்ட மதனாஞ்சேரி கிராமத்தில் மினி கிளினிக் திறந்துவைக்க அமைச்சர்கள் வீரமணி, நிலோஃபர்கபில் சென்றனர். இந்த நிகழ்ச்சிக்காக வந்திருந்த தி.மு.க.வை சேர்ந்தவரும், ஆம்பூர் தொகுதியின் எம்.எல்.ஏ.வான வில்வநாதன், அதே ஊரைச் சேர்ந்தவரும், ஆலங்காயம் தெற்கு ஒ.செவான ஞானவேலனுடன் காத்திருந்தார். விழாவுக்கு வந்த அமைச்சர்கள் எம்.எல்.ஏ.வை புறக்கணித்தனர்.
அதோடு, மேடையில் வைக்கப்பட்ட பதாகையில் எம்.எல்.ஏ. பெயர் இல்லை. இதுகுறித்து அமைச்சர் வீரமணியிடம் எம்.எல்.ஏ வில்வநாதன் கேள்வி எழுப்ப, அது மேடையிலேயே வாக்குவாதமாகியது. இந்த வாக்குவாதத்தின்போது மேடைக்குக் கீழே நின்றிருந்த தி.மு.க., அ.தி.மு.க.வினர் மேடைமேல் ஏற முயன்றனர். அப்போது அவர்களை மேடையேறவிடாமல் தடுத்துக் கொண்டிருந்தார் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி. அப்போது அ.தி.மு.க.வினர் அவரை பிடித்துக் கீழே தள்ளிவிட்டனர்.
இந்த விவகாரத்தில், ஆளும் கட்சியான தங்களுக்கு சாதகமாக இன்ஸ்பெக்டர் நடந்து கொள்ளவில்லையென அமைச்சர் வீரமணி, நிலோஃபர் ஆகிய இருவரும் காவல்துறை அதிகாரிகளிடம் பேசி உடனடியாக இடமாற்றம் செய்யவைத்தனர் எனத் திருப்பத்தூர் மாவட்டத்தில் தகவல் பரவியுள்ளது. இதுகுறித்து கேள்விப்பட்டு அதிர்ச்சியான பொதுமக்கள் மற்றும் தி.மு.க.வினர், கிராமசபைக் கூட்டத்தில் தீர்மானம் இயற்றி பரபரப்பை அதிகப்படுத்தியுள்ளனர்.