கஞ்சா கடத்தல் கும்பல், அண்மைக் காலமாக கார் உள்ளிட்ட தனி வாகனங்களை விடுத்து ரயில்கள் மூலமாக கடத்தி வரும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. காவல்துறையினரும் அவ்வப்போது திடீர் சோதனை நடத்தி, கடத்தல் கஞ்சாவை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, சேலம் ரயில்வே பாதுகாப்புப் படையினர் மற்றும் உள்ளூர் ரயில்வே காவல்துறையினர் இணைந்து புதன்கிழமை (மே 18) அதிகாலை தன்பாத் & ஆழப்புழா பயணிகள் ரயிலில் சோதனையில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள மாவேலிபாளையம் ரயில் நிலையத்தில் இருந்து ஏறி, சோதனையில் ஈடுபட்டனர். முன்பதிவு பெட்டிகளில் நடந்த சோதனையில், ஒரு பெட்டியில் சந்தேகத்திற்கிடமான ஒரு டிராவல்ஸ் பேக் இருந்தது தெரிய வந்தது. அந்தப் பையை சோதனை செய்தபோது, அதற்குள் 5.50 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவற்றை காவல்துறையினர் கைப்பற்றினர்.
அந்தப் பையைக் கொண்டு வந்தது யார் என்று தெரியவில்லை. காவல்துறையினருக்கு பயந்து கஞ்சா கடத்தல் கும்பல், பையை வைத்துவிட்டு பாதி வழியில் இறங்கி ஓடியிருக்கலாம் எனத் தெரிகிறது. கைப்பற்றப்பட்ட கஞ்சா, சேலம் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறையில் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.