விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்துக்கு அருகில் உள்ள அயனாவரம் நொளம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 65). இவருடைய மகன் கிருஷ்ணன். கிருஷ்ணனின் மகள் இனியா (வயது 9). இவர் நொளம்பூர் கிராமத்தில் உள்ள அரசு துவக்கப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார்.
நீச்சல் கற்றுக் கொள்ள வேண்டும் என்று இனியா ஆர்வமாக இருந்தார். அவரை ஊக்கப்படுத்தும் வகையில், செல்வராஜ் தனது பேத்திக்கு நீச்சல் கற்று கொடுப்பதற்கு முன்வந்தார். அதன்படி, நொளம்பூர் கிராமத்தில் உள்ள தண்ணீர் நிறைந்த ஏரியில் தனது பேத்திக்கு நீச்சல் கற்றுக் கொடுப்பதற்காக சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார் செல்வராஜ்.
அதைத் தொடர்ந்து, தனது பேத்திக்கு செல்வராஜ் தண்ணீரில் இறங்கி நீச்சல் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக பேத்தி இனியா தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதைக் கண்டு பதறிப்போன சிறுமியின் தாத்தா செல்வராஜ், தண்ணீரில் தத்தளிக்கும் பேத்தியை மீட்கும் முயற்சியில் தண்ணீரின் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது, செல்வராஜூம் மூச்சுத் திணறல் ஏற்பட்டு தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் தாத்தா, பேத்தி ஆகிய இருவரையும் உயிரிழந்த நிலையில் மீட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த ஒலக்கூர் காவல் நிலைய காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.