Skip to main content

கட்டடப்பணியில் நடந்த சோகம்; இருவர் பலி

Published on 29/11/2022 | Edited on 29/11/2022

 

Tragedy in construction; Two people passed away

 

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகில் கோண்டூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். இவர் அப்பகுதியில் புதிதாக இரண்டு கடைகள் கட்டி வருகிறார். கட்டுமான பணிக்கு தண்ணீர் அதிக அளவில் தேவைப்பட்டது. பொதுக்குழாயில் இருந்து வரும் தண்ணீரை சேமித்து வைப்பதற்காகக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 10 அடி ஆழம், பத்தடி நீளம் உள்ள ஒரு தண்ணீர் தொட்டியை கட்டி அதில் தண்ணீரை தேக்கி வைத்திருந்தார். அந்த தண்ணீர் தொட்டியில் தேங்கி இருந்த தண்ணீர் அகற்றப்படாமல் இருந்துள்ளது.

 

தற்போது சுற்றுச்சுவர் பூசும் பணிக்காக சென்ட்ரிங் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கட்டட மேஸ்திரி மணிகண்டன் அவரது உதவியாளர் ஐயப்பன் ஆகியோர் சென்ட்ரிங் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஐயப்பன் அந்த தண்ணீர் தொட்டிக்குள் இறங்கி உள்ளார். அதிலிருந்து விஷவாயு தாக்கி ஐய்யப்பன் அதன் உள்ளேயே மயங்கி விழுந்தார். இதைக்கண்டு திடுக்கிட்ட மேஸ்திரி மணிகண்டன் ஐயப்பனை காப்பாற்றும் நோக்கில் இவரும் அந்த தண்ணீர் தொட்டிக்குள் இறங்கி உள்ளனர். அவரும் விஷவாயு தாக்கி மயங்கி உள்ளேயே விழுந்துள்ளார்.

 

அவர்களது அருகில் இருந்த ஐயப்பனின் மைத்துனர் அறிவழகன் அவர்கள் இருவரையும் காப்பாற்றுவதற்காக தொட்டியில் இறங்க முயற்சித்தபோது அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. அவர் தொட்டிக்குள் இறங்காமல் வெளியில் வந்து மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அறிவழகனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில் அறிவழகன் மட்டும் உயிர் பிழைத்துள்ளார். மேற்படி ஐயப்பன் மணிகண்டன் ஆகிய இருவரும் தண்ணீர் தொட்டி உள்ளேயே உயிரிழந்தனர்.

 

இது குறித்து கண்டமங்கலம் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீர் தொட்டியில் இறந்து கிடந்த ஐயப்பன், மணிகண்டன் ஆகிய இருவரது உடலையும் மீட்டனர். உடல்களை பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தண்ணீர் தொட்டியில் இறங்கி விஷவாயு தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்