கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகிலுள்ளது விரியூர் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி ஒருவர். இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 21ஆம் தேதி வீட்டிலிருந்து மளிகை கடைக்குச் சென்று பொருட்கள் வாங்கி தருவதற்காக சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் சிறுமியை தேடிப் பார்த்தனர். எங்கும் கிடைக்கவில்லை இதையடுத்து சங்கராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் போலீசார் சிறுமியை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த கொங்கு நாட்டார் என்பவரது மகன் 20 வயது மணிமுத்து என்ற இளைஞன் காணாமல் போன சிறுமியை கடத்தி சென்று விட்டதாக ரகசியத் தகவல் போலீசாருக்கு கிடைத்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெங்களூருவில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு வந்துகொண்டிருந்த அரசு பேருந்தை போலீஸார் நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது அந்த பேருந்தில் இருந்த மணிமுத்து, சிறுமி கடத்தலுக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர் அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜி மகன் அந்தோணி(20) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களுடன் இருந்த சிறுமியை பத்திரமாக மீட்டனர். இதையடுத்து 15 வயது சிறுமியை கடத்திய குற்றத்திற்காக அந்த இரு 20 வயது வாலிபர்களையும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்துள்ளனர். இந்தச் சம்பவம் சங்கராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.