தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நாளை (8.4.2023) சென்னை வருகிறார். நாளை சென்னை வரும் பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்தில் ரூ.1260 கோடியில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த டெர்மினல் கட்டடத்தை திறந்து வைக்கிறார். அதனைத் தொடர்ந்து சென்ட்ரல் ரயில் நிலையம் வரும் மோடி சென்னை - கோவை வந்தே பாரத் ரயில் சேவையை துவக்கி வைக்கிறார். பின்னர் மயிலாப்பூரில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து அந்த இடத்தில் பத்து நிமிடம் உரையாற்றிய பிறகு பல்லாவரம் பகுதியில் பொதுமக்களிடம் 20 நிமிடம் உரையாற்றுகிறார். முதலில் இந்த நிகழ்ச்சி ராமகிருஷ்ணா மடத்தில் நடப்பதாக இருந்த நிலையில் தற்போது விவேகானந்தர் இல்லத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் வருகையால் நகரின் முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையில் மொத்தம் 15 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னை முழுவதும் ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. விமான நிலையம் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் முக்கிய வழித்தடங்களில் ஐந்து அடுக்கு பாதுகாப்பும் போடப்படுகிறது. மேலும் நாளை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கவும் மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரதமரின் வருகை குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பிரதமரின் சென்னை வருகையின் போது விழா நடைபெறும் இடங்களைச் சுற்றியுள்ள சாலைகளிலும், ஐஎன்எஸ் அடையார் முதல் சென்டரல் ரயில் நிலையம் வரையிலும், சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் விவேகானந்தர் இல்லம் வரையிலும் பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை போக்குவரத்து மெதுவாக செல்ல வாய்ப்புள்ளது என்று பயணிகளுக்கு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
விவேகானந்தர் இல்லத்திற்கு பிரதமர் வருகையின் போது காந்தி சிலை அருகே உள்ள கலங்கரை விளக்கத்தில் இருந்து வாகனங்கள் ஆர்.கே. சாலைக்கு திருப்பி விடப்படும். அங்கிருந்து நடேசன் சாலை சந்திப்பில் ஐஸ் ஹவுஸ், ரத்னா கபே, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, வாலாஜா சாலை சந்திப்பு வழியாக தொழிலாளர் சிலை அல்லது அண்ணாசாலைக்கு வலதுபுறம் திரும்பலாம்.
போர் நினைவிடத்தில் இருந்து வெளிச்செல்லும் வாகனங்கள் தொழிலாளர் சிலையிலிருந்து வாலாஜா சாலையில் அண்ணாசாலை நோக்கி அல்லது திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, வாலாஜா சாலை சந்திப்பில் திருப்பி விடப்படும். தேவைப்பட்டால் வாகனங்கள் போர் நினைவிடத்தில் இருந்து வாலாஜா பாயின்ட் வழியாக அண்ணாசாலை நோக்கி கொடி ஊழியர்கள் சாலையில் திருப்பி விடப்படலாம். இந்த மாற்றுப்பாதையானது மாலை 04.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை செயல்படுத்தப்படும்.
மேலும் வணிக வாகனங்களுக்கு மதியம் 02 மணி முதல் மாலை 08 மணி வரை இடையிடையே திசைமாற்றம் கீழ்க்கண்டவாறு செயல்படுத்தப்படும். அண்ணா ஆர்ச் முதல் முத்துசாமி முனை வரை இரு திசைகளிலும் வணிக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள் அண்ணா அரசு வளைவில் திருப்பி அண்ணாநகர், புதிய ஆவடி சாலை வழியாக திருப்பிவிடப்படும். வெளியேறும் திசையில் செல்லும் வாகனங்கள் NRT புதிய பாலத்தில் இருந்து திருப்பிவிடப்பட்டு ஸ்டான்லி சுற்று, மின்ட் சந்திப்பு, மூலகொத்தளம் சந்திப்பு, பேசின் பிரிட்ஜ் டாப், வியாசர்பாடி வழியாகத் திருப்பி விடப்படும்.
ஹண்டர்ஸ் சாலையில் இருந்து வரும் வணிக வாகனங்கள் ஹண்டர்ஸ் ரோடு, ஈவிகே சம்பத் சாலை வழியாக ஈவிஆர் சாலையை அடையும் வகையில் திருப்பி விடப்பட்டு நாயர் பாயின்ட் நோக்கி திருப்பி விடப்படும். லேங்கஸ் கார்டன் சாலையில் இருந்து காந்தி இர்வின் மேம்பாலத்திற்கு வரும் கனரக வாகனங்கள் ஈவிஆர் சாலையை அடைய உடுப்பி பாயின்ட் நோக்கி திருப்பி விடப்படும். கிரீன்வேஸ் சாலையில் இருந்து வரப்படும் கனரக வாகனங்கள் மந்தைவெளி நோக்கி திருப்பி விடப்படும்.
அதிக பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தொழிலாளர் சிலை முதல் விவேகானந்தர் இல்லம் வரையிலான மெரினா சாலையில் கூடுதல் ஆய்வு மற்றும் சோதனைக்கு உட்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.