அனைத்துத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் சார்பில், பா.ஜ.க அரசின் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் விரோதச் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்தியில், ஆளும் பா.ஜ.க அரசு மக்கள் விரோத ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது எனவும் குறைந்தபட்ச பாதுகாப்புள்ள தொழிலாளர் சட்டங்களையும் ஜனநாயக நெறிமுறைகளுக்கு மாறாக மாற்றி அமைத்து, கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக சட்டங்களை அமலாக்கி வருகிறது என்றும், மக்கள் வரிப்பணத்தில் நாட்டுமக்கள் நலனுக்காக உருவான பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயப்படுத்தும் நிலையில் எதிர்கால சந்ததியினர் யாரும் அரசு வேலையில் சேருவது என்பது வெறும் கனவாகிப் போகும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கூறினர்.
மத்திய பா.ஜ.க அரசின் தொழிலாளர் விரோதச் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, அனைத்து மத்திய மாநில தொழிற்சங்கக் கூட்டமைப்புச் சார்பில் 26.11.2020 அன்று அகில இந்திய பொது வேலை நிறுத்த மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் அனைத்துத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் சார்பில் வருமானவரி செலுத்தும் வரம்பிற்குள்ள வராத குடும்பத்தினர் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.7,500 ரொக்கமாக வழங்கிடவேண்டும், ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் அனைவரும் மாதம் ஒன்றுக்கு 10கிலோ உணவு தானியத்தை இலவசமாக அளித்திட வேண்டும், விவசாயிகளுக்கு எதிராக அனைத்து வேளாண் சட்டங்களையும் தொழிலாளர்களுக்கு எதிரான தொழிலாளர் சட்ட தொகுப்புகளையும் திரும்பப்பெற வேண்டும், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள் பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கான வயதை எட்டும் முன்பே கட்டாயமாகப் பணி ஓய்வு அளிக்க வகை செய்யும் கொடூரமான சுற்றறிக்கையை திரும்பப் பெறவேண்டும், மின்சாரச் சட்டம் 2020-ஐ வாபஸ் வாங்கவேண்டும், அத்தியாவசியப் பொருள் பாதுகாப்புச் சட்டம் மற்றும் ஒப்பந்தச் சட்டத்தைக் கைவிடவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.