நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.