ஈரோடு வளையக்கார வீதியில் வசிக்கும் குப்பிபாலம் பழனிசாமி என்பவரது வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ஈரோடு டவுன் போலீசாருக்கு தகவல் சென்றதின் அடிப்படையில் போலீசார் 3ஆம் தேதி மதியம் அந்த வீட்டுக்கு சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 50 கிலோ சிப்பமாக இரண்டரை டன் ரேஷன் அரிசி இருப்பது உறுதி செய்யப்பட்டது.
வீட்டில் இருந்த பழனிச்சாமி மனைவி ஜெயந்தி (49) என்பவரை போலீசார் கைது செய்ததோடு ரேஷன் அரிசி கடத்தலுக்கு அவர் பயன்படுத்திய ஒரு ஸ்கூட்டி, மற்றும் இரண்டரை டன் ரேஷன் அரிசியை போலீசார் கைப்பற்றி அவற்றை பறிமுதல் செய்தனர்.
போலீஸ் விசாரணையில், ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்த முருகன் என்பவருக்காக வளையக்கார வீதி பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் இருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலையில் வாங்கி அதை ஜெயந்தி மூட்டையாக கட்டி வைத்திருக்கிறார். இந்த அரிசிகளை குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை வந்து முருகன் பெற்றுக் கொள்வாராம். அந்த முருகன் 4ஆம் தேதி இந்த ரேஷன் அரிசி மூட்டைகளை எடுத்து செல்ல இருந்த நிலையில் அரிசி மூட்டைகள் பிடிபட்டுள்ளது. போலீசார் நடவடிக்கை பற்றி தகவல் தெரிந்ததும் முருகன் தலைமறைவாகி விட்டார்.
ஈரோடு உணவுபொருட்கள் கடத்தல் தடுப்பு நுண் அறிவு பிரிவு போலீசாரிடம் ரேஷன் அரிசி மூட்டைகள், ஸ்கூட்டி ஆகியவற்றை ஈரோடு டவுன் போலீசார் ஒப்படைத்தனர். மேலும் அந்தப் பெண் ஜெயந்தியும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். ரேஷன் அரிசி கடத்தல் விவகாரம் தொடர்பாக அப்பெண்ணிடம் தொடர்ந்து விசாரணை நடத்துகிறார்கள்.
ஈரோட்டில் உள்ள ரேசன் கடைகளில் பெறப்படும் இந்த ரேசன் அரிசி களை மொத்தமாக அரிசி மில்லுகளுக்கு அனுப்பி வைத்து வருகிறார் முருகன் என்பவர் ஒரு மாதத்தில் 10 டன்னுக்கு மேல் ரேசன் அரிசி கடத்தப்பட்டு வந்திருக்கிறது. சம்பந்தப்பட்ட முருகன் ஆளுங்கட்சி பிரமுகருக்கு மிகவும் வேண்டப்பட்டவர் என போலீசார் கூறுகின்றனர்.