அரசு என்னதான் கடுமையாக சட்டம் போட்டாலும் பான்பராக், குட்கா போன்ற போதைப் பொருட்கள் விற்பனை என்பது ரகசியமாகப் பல இடங்களில் நடந்து வருகிறது.
ஈரோடு மாவட்டம் சிவகிரி இளங்கோ தெருவைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவர் அதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவருக்குச் சொந்தமான குடோன் சிவகிரி பட்டேல் தெருவில் உள்ளது. அந்த குடோனில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரிலிருந்து போதைப் பொருட்கள் (குட்கா) கடத்தி வந்து பதுக்கி வைத்திருப்பதாகக் குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசாருக்குத் தகவல் சென்றிருக்கிறது.
அதன் பேரில் 22ந் தேதி அதிகாலை வேல்முருகனுக்குச் சொந்தமான குடோனுக்கு பெருந்துறை சரக காவல் உதவி கண்காணிப்பாளர் கவுதம் கோயல் தலைமையிலான போலீசார் நேரடியாகச் சென்று அங்கு சோதனை செய்தனர். அப்போது அந்த குடோனில் வெங்காய லோடு அரிசி மூட்டைக்கு இடையில் சுமார் ஒரு டன் (ஆயிரம் கிலோ) எடையுள்ள குட்கா மற்றும் போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். மேலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வாகனத்திலும் போதைப் பொருட்கள் மூட்டை மூட்டையாக இருந்துள்ளது.
இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து வேல்முருகன் மற்றும் சரக்கு வாகனத்தின் டிரைவர் தங்கராஜ் ஆகியோரை உடனடியாக கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம், ஒரு டன் போதைப்பொருட்கள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கர்நாடகா மாநிலம் வழியாக ஓசூரிலிருந்து போதைப் பொருட்களை வாங்கி வந்து அங்கு பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. மேலும் இதன் பின்னணியில் வேறு யாரும் உள்ளார்களா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தியபோது வட இந்திய மார்வாடி முதலாளிகள்தான் இந்த போதைப் பொருட்களை விற்பதாக தெரிய வந்துள்ளது. சிவகிரியில் 1 டன் போதைப் பொருட்கள் பதுக்கியிருந்த வேல்முருகனிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.