தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தீவிரம் காரணமாக காய்கறிகளின் விலை அதிகரித்தது. புதுச்சேரியில் கடந்த ஞாயிறு அன்று கனமழை காரணமாக காய்கறி விலை கிடுகிடுவென உயர்ந்தது. இந்நிலையில் அத்தியாவசிய காய்கறிகளுள் ஒன்றான தக்காளியின் விலை 150ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ''மழையால்தான் தக்காளி விலை அதிகரித்துள்ளது. மழை இல்லாத மாநிலங்களிலிருந்து தக்காளி கொண்டுவரப்பட்டு வருகிறது. இந்த தக்காளி விலை உயர்வு என்பது தாற்காலிகமானது தான். 600 மெட்ரிக் டன் தக்காளி வரவைக்கப்பட்டுள்ளது. நடமாடும் காய்கறி கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். முதற்கட்டமாக 10 உழவர் சந்தைகளைத் தொடங்குவதோடு அவை திறம்படச் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்'' எனத் தெரிவித்துள்ளார்.
தக்காளி விலை உயர்வு பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், தக்காளி தேடு பொருளாகவும் மாறியுள்ளது. ஆம், கூகுளில் அதிகம் தேடும் வார்தைகளில் குறிப்பாகத் தமிழில், தக்காளி என்ற டைப் செய்தாலே தக்காளி இல்லாமல் குழம்பு செய்வது எப்படி?, தக்காளி இல்லாமல் சட்னி செய்வது எப்படி?, தக்காளி இல்லாமல் ரசம் செய்வது எப்படி என தானாக காட்டுகிறது. இதுகுறித்த விவாதம் சமூக வலைதளத்திலும் பேசு பொருளாக உள்ளது. தக்காளி தொடர்பாக காமெடி மீம்ஸ்களும் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு வெங்காயம் விலை உயர்வின் பொழுது கூகுளில் வெங்காயம் தேடப்பட்ட நிலையில் தற்பொழுது அந்த இடத்தை பிடித்துள்ளது 'தக்காளி'