சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் சுமார் 130க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பல ஆண்டுகளாக பணி செய்து வருகின்றனர். இந்த நிலையில், டோல்கேட் நிர்வாகம் நேற்று முன்தினம் திடீரென 28 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், டோல்கேட் நிர்வாகத்தை கண்டித்தும், மீண்டும் பணி வழங்க கோரியும் நுழைவு வாயில் அமர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் சரவன்குமார் ஆலோசனையின் பேரில் திருக்கோவிலூர் கோட்டாட்சியர் யோக ஜோதி தலைமையில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ மணிகண்ணன், நகராட்சி துணைத்தலைவர் வைத்தியநாதன் மற்றும் சி.பி.எம்., சி.பி.ஐ., அ.தி.மு.க, பா.ம.க, வி.சி.க உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் நிர்வாகத்திடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு எட்டப்படாததால் நேற்று முன்தினம் பகல் இரவு என போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தாசில்தார் மணிமேகலை, தொழிலாளர் துறை உதவி இயக்குநர் ஆனந்தன் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் டி.எஸ்.பி. மகேஷ் ஆகியோர் ஒரு பக்கம் டோல்கேட் மேலாளர் இடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது முன்னறிவிப்பு இன்றி தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்யக்கூடாது என்றும் உரிய இழப்பீடு தொகை வழங்கி தொழிலாளர் நலசட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியதோடு நீக்கப்பட்ட அனைத்து பணியாளர்களையும் வேலைக்கு அழைத்துக் கொள்ள வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டு இதற்காக ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
அந்த ஒப்பந்தத்தில் அனைவரும் கையெழுத்திட்ட நிலையில் டோல்கேட் நிர்வாகத்தினர் அந்த தொழிலாளர்களுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து போட மறுத்து விட்டனர். இதனால் தொழிலாளர்களின் உள்ளிருப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவதால் டோல்கேட் பகுதியில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தொழிலாளர்கள் போராட்டத்தின் காரணமாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களும் கட்டணம் இன்றி இலவசமாக சென்று வருகிறது. இதனால் டோல்கேட் நிர்வாகத்திற்கு பல லட்சம் இழப்பு ஏற்பட்டு உள்ளது.